தேடுதல்

அல்பானோ ஏரி மரியன்னை திருப்பவனியில், போரால் காயமடைந்த குழந்தைகளை அன்னையிடம் ஒப்படைத்த திருத்தந்தை!

அல்பானோ ஏரியில் இடம்பெற்ற ஏரியின் அன்னை மரியாவின் திருப்பவனியில் பங்கேற்ற திருத்தந்தை, “வெறுப்பு பெருகும் இடத்தில் மன்னிப்பையும், அச்சம் நிலவும் இடத்தில் நம்பிக்கையையும் எங்களுக்குக் கற்றுத்தாரும்” என்று இறைவேண்டல் செய்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

“வெறுப்பு பெருகும் இடத்தில் மன்னிப்பையும், அச்சம் நிலவும் இடத்தில் நம்பிக்கையையும் எங்களுக்குக் கற்றுத்தாரும்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இறைவேண்டல் செய்தார்.

அல்பானோ ஏரியில் இடம்பெற்ற ஏரியின் அன்னை மரியாவின் திருப்பவனியில் பங்கேற்றபோது இவ்வாறு இறைவேண்டல் செய்துள்ள திருத்தந்தை, போர், துன்பம் மற்றும் பிளவுகளால் பாதிக்கப்பட்ட உலகிற்காக அமைதியை வேண்டியதுடன்  திருஅவையையும் உலக மக்களையும் கன்னி மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்தார்.

பொதுவாழ்வில் பொறுப்பேற்றுள்ளவர்கள் நீதி, சுதந்திரம், ஒவ்வொருவரின் மனித மாண்பு மற்றும் பொது நலனைப் பேணிச் செயல்பட வேண்டும் என்றும் திருத்தந்தை  நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அன்னை மரியாவை “கேட்பதிலும் பணியாற்றுவதிலும் சிறந்த பெண்” என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நற்செய்தியைத் துணிவுடன் அறிவிக்கும், பணிவுடன் சேவை செய்யும், அன்பில் நிலைத்திருக்கும் திருஅவைக்காகவும்  இறைவேண்டல் செய்தார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்த திருத்தந்தை, அனைவரின் உள்ளங்களிலும் அமைதிக்கான ஏக்கம் வளரவும், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் தனிமையில் வாழ்வோருக்காகவும் சிறப்பாக இறைவேண்டல் செய்தார்.

ஏரியின் அன்னை மரியாவின் திருவுருவத்துடன் ஃபால்கோ படகில் பயணித்த திருத்தந்தை, ஏறத்தாழ 25 நிமிடங்கள் அல்பானோ ஏரியின் நீரில் பயணம் செய்தார்.  அல்பானோ ஏரியில் நடைபெற்ற இந்தத் திருப்பவனியில் படகில் பங்கேற்ற முதல் திருத்தந்தை என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் வருகைக்கு முன்னர் சலேசிய துறவியர்கள் பாடல்கள், மறைநூல் வாசிப்புகள் மற்றும் தியானத்தின் மூலம் இறைமக்களை வழிநடத்தினர். அமைதிக்கான இறைவேண்டலுடன் மரியாவின் திருவுருவத்தின் முன் நிகழ்வு நிறைவடைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஆகஸ்ட் 2026, 10:09