தேடுதல்

நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்திற்குப் பின்னர் சேற்றை அகற்றும் பணியில் தொழிலாளர்கள். நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்திற்குப் பின்னர் சேற்றை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்.  (AFP or licensors)

நேபாள வெள்ளப் பாதிப்புகளுக்கு திருத்தந்தை நிதியுதவி!

நேபாளத்தில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் வகையில், திருத்தந்தை அவர்கள், பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் மூலம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

நேபாள நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பிறரன்புப் பணிக்கான திருப்பீடத்‌ துறையின் மூலம் நேபாளத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.

நேபாளத்திலுள்ள திருப்பீடத் தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்ட இந்த நிதியுதவி, வீடுகளையும் உடமைகளையும் இழந்த மக்களுக்கு அவசர உதவிகளை வழங்கும் ‘காரித்தாஸ் நேபாள்’ அமைப்பின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும். இதில் உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் அடங்கும்.

பாதிக்கப்பட்ட மற்றும் எளிய மக்களுக்கு திருத்தந்தையின் நெருக்கமான ஆதரவை உணர்த்தும் "விரைவான மற்றும் உறுதியான அடையாளம்" தான் இந்த நிதி உதவி என்று பிறரன்புப் பணிக்கான திருப்பீடத்‌ துறையின் தலைவரான பேராயர் லூயிஸ் மரின் டி சான் மார்ட்டின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 26 அன்று அனுப்பப்பட்ட தந்திச் செய்தியில், இந்த பேரிடர் குறித்து திருத்தந்தை அவர்கள் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தாம் இறைவேண்டல் செய்வதாகவும், ஆன்மீக ரீதியாக அவர்களுடன் உடனிருப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.

அண்மைய அறிக்கைகளின்படி, 630-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் உள்பட ஏறத்தாழ 3,000 பேரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஒரு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படும் 100-க்கும் மேற்பட்ட மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் நேபாள இராணுவம் ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் மீட்பு மற்றும் மனிதநேயப் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் அதே வேளையில், உடனடி நிவாரணத்தை வழங்குவதையே திருத்தந்தையின் இந்த நிதி உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஆகஸ்ட் 2026, 10:36