மிகவும் நலிவுற்றோரில் கிறிஸ்துவைக் காணுங்கள்: திருத்தந்தை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மிகவும் நலிவுற்றவர்களின் வாழ்வில் கிறிஸ்துவைக் காண்பது, ஒரு சமூகம் மனிதநேயத்திலும் கிறிஸ்தவப் பண்புகளிலும் வளர்வதற்கு வழிவகுக்கிறது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 24, திங்களன்று, அறிவுசார் குறைபாடுகள் மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்சோடெத்தோ கூட்டமைப்பின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
மார்சோடெத்தோ கூட்டமைப்பின் 45ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, பல ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையையும் பாராட்டினார்.
மேலும், அவர்களின் பணி கடினமானதுடன், பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாத பணிகளையும் உள்ளடக்கியது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அவர்கள் சேவை செய்யும் ஒவ்வொருவரிலும் கிறிஸ்துவைச் சந்திக்கும் மகிழ்ச்சியைப் பெறுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
உடனிருத்தல், மனித மாண்பைப் பாதுகாத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றில் இந்தக் கூட்டமைப்பின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பொது நிறுவனங்களின் ஆதரவையும், பொது நலனுக்கான அவர்களின் பங்களிப்பையும் அங்கீகரித்தார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் முன்பாக ஒரு கனவாகத் தோன்றிய 'அறிவுசார் குறைபாடுள்ள நபரைக் கொண்ட எந்தக் குடும்பமும் ஆதரவின்றி விட்டுவிடப்படக் கூடாது' என்ற சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த டான் மார்செலினோ காசாஸ் புவென்டேவின் அர்ப்பணிப்பையும் திருத்தந்தை பாராட்டினார்.
அவர்களின் பணி பல மக்களைச் சென்றடைந்ததற்காகக் கூட்டமைப்பைப் பாராட்டிய திருத்தந்தை, "கிறிஸ்தவ அன்பு இறைமக்களைத் தங்கள் சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்ய அழைக்கிறது" என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இறுதியாக, இந்தக் கூட்டமைப்பை அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்த திருத்தந்தை, உறுப்பினர்கள் தங்கள் பணியில் தொடர்ந்து நிலைத்திருக்கவும், திருஅவை மற்றும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழவும் ஊக்கமளித்து தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
