தேடுதல்

செபம் மற்றும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் திருத்தந்தையை வரவேற்கும் சான் மரினோ

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஆகஸ்ட் 22ஆம் நாள் வருகையை முன்னிட்டு, சான் மரினோ குடியரசு, செபம் மற்றும் ஆன்மீகத் தயாரிப்புடன் அவரை வரவேற்கிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் திருத்தந்தையை ஆவலுடன் எதிர்நோக்குவதுடன், உலக அமைதிக்காகவும் போரில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காகவும் செபிக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

செபம், மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு மற்றும் தனது கிறிஸ்தவ வேர்களை மீண்டும் நினைவுகூரும் உணர்வுடன், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை  ஆகஸ்ட் 22ஆம் நாள் வரவேற்க சான் மரினோ குடியரசு தயாராகி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான “Il Colore del Grano” மையத்தில் வசிப்பவர்கள் திருத்தந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். சான் மரினோ குடியரசின் வெள்ளை மற்றும் இளநீல நிறங்களில் சிறிய செபமாலை ஒன்றையும், தங்களது எண்ணங்கள் மற்றும் மதிப்புகளைப் பகிரும் கடிதத்தையும் அவர்கள் தயாரித்துள்ளனர். போர்களால் துன்புறும், உயிரிழக்கும் குழந்தைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் திருத்தந்தை செபிக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.

முதியோருக்கான பராமரிப்பு மையத்தில் வசிப்பவர்களும் திருத்தந்தையின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகின்றனர். அவர்களில் சிலர், 1982ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் சான் மரினோவுக்கு வருகை தந்ததை நினைவுகூருகின்றனர். மேலும் சிலர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமைதி குறித்து பேசும் திருத்தந்தை பதினான்காம் லியோவை நேரில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர்.

திருத்தந்தையின் சான் மரினோ பயணத்தின் இறுதி நிகழ்வு, அந்நாட்டின் நிறுவுநரும் பாதுகாவலருமான புனித மரினஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித மரினஸ் பேராலயத்தில் நடைபெறுகிறது. இந்த வருகை, சான் மரினோவின் கிறிஸ்தவ வேர்களையும், சுதந்திரம், உண்மை, கிறிஸ்தவ அன்பு ஆகிய மதிப்புகளையும் மீண்டும் கண்டறியும் வாய்ப்பாக அமையும் என்று பேராலய அதிபர் அருட்தந்தை மார்கோ மஸ்ஸாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையை வரவேற்கும் வகையில் சிறப்பு செபங்கள், சமய, கலாசார மற்றும் கல்வி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் Magnifica Humanitas திருமடலின் அறிமுக நிகழ்வும் இடம்பெறும்.

புனித தொன் போஸ்கோவின் ஆன்மீகத்தைப் பின்பற்றும் சலேசிய சமூகமும், திருத்தந்தைக்காகவும் உலகளாவிய திருஅவைக்காகவும் தொடர்ந்து செபித்து வருகிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஆகஸ்ட் 2026, 07:25