தேடுதல்

வாழ்வு திருப்பீடக் கழக அங்கத்தினர்களுடன் திருத்தந்தை (கோப்பு படம்) வாழ்வு திருப்பீடக் கழக அங்கத்தினர்களுடன் திருத்தந்தை (கோப்பு படம்) 

பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார, நல, சமூக பாதிப்புக்கள்

கோவிட் பெருந்தொற்றால் ஏழ்மை நிலைக்கும், கைவிடப்பட்ட நிலைக்கும், பெற்றோரை இழந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த வத்திக்கான் ஏடுகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

கோவிட் பெருந்தொற்று, கல்வித்துறையிலும், குழந்தைகளிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் குறித்த இரு ஏடுகளை, வாழ்வு திருப்பீடக் கழகம் இப்புதன்கிழமையன்று வெளியிட்டது.

'கோவிட் பெருந்தொற்றும், கல்வியின் சவாலும்', என்ற தலைப்பில் திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையுடன் இணைந்து தயாரித்த ஏட்டையும், திருப்பீடத்தின் கோவிட்-19 அவையுடன் இணைந்து தயாரித்த,'குழந்தைகளும் கோவிட்-19 பெருந்தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டோர்', என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட ஏட்டையும், டிசம்பர் 22, இப்புதன் காலையில் வெளியிட்டது, வாழ்வு திருப்பீடக்கழகம்.

கோவிட் பெருந்தொற்றால் எண்ணற்ற குழந்தைகள் ஏழ்மை நிலைக்கும், கைவிடப்பட்ட நிலைக்கும், பெற்றோரை இழந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதைப் பற்றி எடுத்துரைக்கும் இவ்வேடுகள், பெருந்தொற்றுக் காலத்தில், குழந்தைகள் சுரண்டப்படுவது, உரிமைகள் பறிக்கப்படுவது, கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது போன்றவைகளையும் குறிப்பிடுகின்றன.

இன்றைய பெருந்தொற்றுக் காலத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் துயர்களை அகற்ற திருஅவையின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் இவ்வேடுகள், சமுதாயத்தின் கடமைகளையும் விரிவாக ஆய்வு செய்துள்ளன.

குழந்தைகள் மீது இந்த பெருந்தொற்றுக் காலம் ஏற்படுத்தியுள்ள பொருளாதார, நல, மற்றும் சமூகப் பாதிப்புக்கள் குறித்தும், ஏழ்மை அதிகரிப்பு, உணவு நெருக்கடி, உரிமை மீறல்கள் அதிகரிப்பு போன்றவை குறித்தும் புள்ளி விவரங்களுடன் விவரிக்கின்றன இவ்வேடுகள்.

இவ்வாண்டு செப்டம்பர் 30 வரையுள்ள கணக்கெடுப்பின்படி, கோவிட் பெருந்தொற்று காலத்தில், 50 இலட்சம் குழந்தைகள்வரை தங்கள் பெற்றோர், அல்லது, தங்களை வளர்த்தவர்களை இழந்துள்ளதாகவும், 15 கோடிக் குழந்தைகள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், பாலர் தொழிலாளர் எண்ணிக்கை 16 கோடியை எட்டியுள்ளதாகவும் இவ்வேடுகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2021, 15:41