தேடுதல்

உக்ரைனில் இரஷ்ய ஏவுகணை தாக்குதல் உக்ரைனில் இரஷ்ய ஏவுகணை தாக்குதல்  (AFP or licensors)

காரித்தாஸ் அமைப்பின் Lviv சேமிப்புக் கிடங்கு முற்றிலும் அழிவு

உக்ரைனுக்கு மேற்குப் பகுதியில் உள்ள Lviv நகரில் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் மனிதாபிமான சேமிப்பு இல்லம் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஆற்றிவரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் Lviv சேமிப்புக் கிடங்கு இரஷ்ய ஏவுகணைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் கர்தினால் Konrad Krajewski.

தற்போது உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்டிருக்கான உதவி இல்லம் ஒன்றைத் திறக்கும் நோக்கத்துடன் அங்குச் சென்றுள்ள, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் க்ரயேவிஸ்கி அவர்கள், செப்டம்பர் 19 செவ்வாய்க்கிழமை மாலையில் இடம்பெற்ற இரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் மனிதாபிமானப் பொருட்களை செமித்து வைத்திருந்த இடம் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது பெரும் கவலை தருவதாக உள்ளது என்றார்.   

திருத்தந்தையால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்கான பொருட்களை வைத்திருந்த இல்லம் முற்றிலுமாக 300 டன் உதவிப்பொருட்களுடன் அழிந்துள்ளது, துன்புறும் மக்களுக்கான பணிகளை தடைச் செய்துள்ளது என்றார் கர்தினால் Krajewski.

உக்ரைனுக்கு மேற்குப் பகுதியில் உள்ள Lviv நகரில் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் மனிதாபிமான சேமிப்பு இல்லம் அழிவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், ஏழை மக்களுக்கான ஒரு சிறிய இலவச உணவகம் ஒன்றைத் திறக்க உள்ள கர்தினால் க்ரயேவிஸ்கி அவர்கள், அகதிகளை வரவேற்று உதவும் சமூகங்களையும், சுயவிருப்பப் பணியாளர்களையும் சந்தித்து திருஅவையின் நன்றியையும் வெளியிட உள்ளார்.

20 September 2023, 15:09