ஒருங்கிணைந்த பயணமே, திருஅவை ஒன்றிப்பின் வழி
அந்த்ரேயா தொர்னியெல்லி,
திமினா செலின் ராஜேந்திரன் – வத்திக்கான்
தொடங்கவிருக்கும் ஆயர் மாமன்றக் கூட்டம் பற்றி வத்திக்கான் செய்தி ஊடகத்திற்கு வியன்னா பேராயர், கர்தினால் கிறிஸ்டோப் ஷான்போர்ன் அவர்கள் அளித்த பேட்டியில், ஆயர் மாமன்றம் என்பது திருஅவையின் ஒற்றுமையின் செயல்பாடாகும் எனவும், இது இறைமக்கள் அனைவரின் ஒன்றிணைந்த பயணமாகும் எனவும் எடுத்துரைத்தார்.
ஆயர் மாமன்றத்திற்கு தயாராகி வரும் இன்றைய திருஅவையையும், 1985ஆம் ஆண்டு நடைபெற்றபோது விவாதிக்கப்பட்ட கருப்பொருளான ஒற்றுமைக்கான முயற்சியையும் தொடர்புப்படுத்திச் சுட்டிக்காட்டிய கர்தினால் ஷான்போர்ன் அவர்கள், பகுத்தறிவின் பாதையை ஆழப்படுத்தவும், கற்றுக்கொள்ளவும், அனுபவிக்கவும், இன்றைய திருஅவையின் தேவைகளை தேர்ந்து தெளிந்து கொள்ளவும் ஆயர் மாமன்றம் ஒரு முயற்சியாகும் எனவும் கூறினார்.
வியன்னா தலத்திருஅவையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மறைமாவட்ட நிறுவனங்கள், ஆணைக் குழுக்கள் அனைத்திலிருந்தும் 1,400, மற்றும் 1,500 பிரதிநிதிகள் என ஐந்து மன்றங்கள் சிறப்பிக்கப்பட்டதாகவும், மறைமாவட்டத்தின் இந்த முயற்சி, அவர்களிடையே ஒற்றுமையை ஆழப்படுத்தியதோடு, மேய்ப்பு முயற்சிகளை ஊக்குவித்ததாகவும் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் கர்தினால்.
கடந்த 50 ஆண்டுகளாக ஆயர் மாமன்றக் கூட்டங்களில் ஆண்களும், பெண்களும் என பொதுநிலையினர் நிபுணர்களாகப் பங்கேற்று, செவிமடுப்பவர்களாக மட்டும் இருந்திருக்கிறார்கள் என்ற கர்தினால் ஷான்போர்ன் அவர்கள், இப்போதுதான் முதன்முறையாக நல்ல எண்ணிக்கையிலான பொதுநிலையினர், ஆயர் குழுவில் முழு உறுப்பினர்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பொதுநிலையினரின் பங்கேற்பு முன்னைவிட அதிகமாக இருக்கும் என்றாலும், இது நிச்சயமாக ஆயர்களின் மாமன்றம் எனவும், அதிக எண்ணிக்கையிலான விசுவாசிகளையும், திருஅவையிலிருந்து விலகியவர்களையும் ஈடுபடுத்தும் முறை பகுத்தறிவுக்கு முக்கியமானதெனவும் கூறினார் வியன்னா கர்தினால்.
இந்த பரந்த பங்கேற்பின் விளைவாக பல குறிப்பிட்ட சீர்திருத்தங்களுக்கான கோரிக்கை அல்லது தார்மீக இறையியல் தொடர்பான சில சிக்கல்களை மறுபரிசீலனை செய்வதற்கும், இன்றைய உலகின் பல்வேறு சிக்கலை விவேகத்துடனும் நேர்மையுடனும் பார்க்கவும், பகுத்தறியவும் ஓர் அழகான மற்றும் சக்திவாய்ந்த சந்தர்ப்பமாக இது இருக்கும் எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் ஷான்போர்ன்.