தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  (ANSA)

திருத்தந்தைக்குக் கீழ்ப்படிதல் அந்நாட்டின் மீதான அன்பிற்கு உயிரூட்டுகிறது!

சீனாவின் ஷாங்காய் திருச்சங்கம் குறிப்பிட்டதொரு திருச்சங்கம் என்றாலும், அது பரந்ததொரு திருஅவையின் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது : கர்தினால் பரோலின்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகிலுள்ள அனைத்து கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைவர் திருத்தந்தையின்மீது கொண்டிருக்கும் கீழ்ப்படிதல் என்பது, அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் மீது வைத்திருக்க வேண்டிய அன்பிற்குத் தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக அதை தூய்மைப்படுத்துகிறது மற்றும் அதற்கு உயிரூட்டுகிறது என்று கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

"100 ஆண்டுகள் Concilium Sinense : வரலாறு மற்றும் நிகழ்காலத்திற்கு இடையே" என்ற மையக்கருத்தில் உரோமையிலுள்ள உர்பானும் பாப்பிறைக் கல்லூரியில் நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, ​​ஷாங்காய் திருச்சங்கம் குறிப்பிட்டதொரு திருச்சங்கம் என்றாலும், அது பரந்ததொரு திருஅவையின் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது என்று குறிப்பிட்டார் கர்தினால் பரோலின்.

சீனாவின் இந்தத் திருச்சங்கத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி, அடுத்த ஆண்டுகளில் தங்கள் சொந்த தேசிய ஒன்றிணைந்த பயணத்தைக் (synods) கொண்டாடத் தயாரான பல மறைபரப்புத் தளங்களுக்கு இதவொரு முன்மாதிரியாக இருந்தது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் பரோலின்.

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூருவது திருஅவையின் தற்போதைய காலத்திற்கும் மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின், இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பேரில், ஒன்றிணைந்த பயணம் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டு, கடவுளின் மக்களை திருஅவையின் வாழ்க்கையில் பொறுப்பாகவும் தலைவர்களாகவும் வாழ அழைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மே 15 முதல் ஜூன் 12 வரை நடைபெற்ற ஷாங்காயின் திருச்சங்கத்தின் தந்தையர்களுக்கு இதே அனுபவம் இருந்தது என்று கூறிய கர்தினால் பரோலின்,  நாம்  ஒரு பேராலயத்தைக் கட்டும் அடக்கமான தொழிலாளர்களை ஒத்திருக்கிறோம், அதன் வடிவமைப்பு கட்டிடக் கலைஞரால் வழங்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொருவரும் தனது சொந்த செங்கல்லை பெரிய கட்டுமானத்திற்கு கொண்டு வருகிறார்கள் என்றும், நம்மைப் பொறுத்தவரை, கட்டிடக் கலைஞர் என்பவர் திருத்தந்தை, தொழிலாளர்கள் கடந்து செல்கிறார்கள், ஆனால் பேராலயம் அப்படியே உள்ளது என்று கூறிய பேராயர் Celso Costantini-இன் கூற்றையும் எடுத்துக்காட்டி விளக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2024, 12:47