வத்திக்கான் விண்வெளி ஆய்வகத்திற்குப் புதிய இயக்குநர்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
திருப்பீடத்தின் விண்வெளி ஆய்வக இயக்குநராக தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இயேசு சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் காய் கன்சோல்மேக்னோ அவர்களின் 10 ஆண்டு பணிக்காலம் வரும் செப்டம்பர் மாதித்தில் நிறைவு பெறும் நிலையில், அதன் புதிய இயக்குனராக இயேசு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் ரிச்சர்டு அந்தோணி டி சூசா அவர்கள், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கோவாவைச் சேர்ந்த புகழ் பெற்ற விண்வெளி அறிஞரான அருள்பணி. டி சூசா அவர்கள், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வத்திக்கான் விண்வெளி ஆய்வகத்தின் ஊழியராகவும் பணியாற்றியுள்ளார்.
Max Planck நிறுவனம் மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பால்வெளி அண்டத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சிறப்பாக, பல பன்னாட்டு அறிவியல் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளிட்டுள்ளார் அருள்பணியாளர் . ரிச்சர்டு டி சூசா.
மேலும், அருள்சகோதரர் கன்சோல்மேக்னோ அவர்கள் தனது பணிக்காலம் நிறைவடைந்த பின், அரிசோனாவின் டக்சனில் உள்ள வத்திக்கான் விண்வெளி ஆய்வக நிறுவனத்தின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1891-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வாய்வகம், நம்பிக்கையும் அறிவியலும் இணைந்து செயல்படலாம் என்பதை வலியுறுத்தும் நோக்குடன் இயங்கி வருகிறது. மேலும் இது விண்மீன்கள், பால்வெளி அண்டங்கள் மற்றும் அதன் தோற்றம் பற்றிய ஆய்வுகளில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்