தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ  

மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியில் பங்கேற்க இருப்போர்

செப்டம்பர் 26, வெள்ளி மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் முன் தயாரிப்பு செப வழிபாட்டிற்கு புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையேற்று சிறப்பு செய்ய இருக்கின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை முதல் 28 ஞாயிறு வரை வத்திக்கானில் நடைபெற இருக்கும் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியில் பங்கேற்க ஏறக்குறைய 115 நாடுகளிலிருந்து 20ஆயிரம் மறைக்கல்வியாளர்கள்  வர இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது நற்செய்தி அறிவிப்புப் திருப்பீடத்துறை.

செப்டம்பர் 24, புதனன்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இத்தாலி, இஸ்பெயின், போர்த்துக்கல், போலந்து, உக்ரைன், அர்ஜெண்டினா,  பிரேசில், பராகுவே, மெக்சிகோ, பெரு, கொலோம்பியா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சார்ந்த மறைக்கல்வியாளார்கள் பங்கேற்க இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது நற்செய்தி அறிவிப்பிற்கான திருப்பீடத்துறை.

செப்டம்பர் 26 வெள்ளி மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் முன் தயாரிப்பு செப வழிபாட்டிற்கு புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையேற்று சிறப்பு செய்ய இருக்கின்றார். அதன்பின் இரண்டாவது பகுதியாக லூக்கா நற்செய்தியில் உள்ள எம்மாவு சீடர்களுடனான இயேசுவின் சந்திப்பு பகுதியானது சிந்தித்து தியானிக்கப்பட இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து இத்தாலியைச் சார்ந்த Liliana Russo, மொசாம்பிக்கைச் சார்ந்த Paulo Agostinho Matica, மெக்சிகோவைச் சார்ந்த Estela Evangelista Torres, தங்களது மறைக்கல்விப் பயணம் மற்றும் அனுபவங்களை சான்றுபகர உள்ளனர்.

செப்டம்பர் 27 சனிக்கிழமை மாலை உரோமில் உள்ள பல்வேறு தலத்திருஅவை ஆலயங்களில், இத்தாலியம், ஆங்கிலம், போர்த்துக்கீசியம், இஸ்பானியம், பிரெஞ்சு, போலந்து ஆகிய மொழிகளில் ஆயர்கள் மறைக்கல்வி உரையினை வழங்க இருக்கின்றனர்.  

செப்டம்பர் 28, ஞாயிறு காலை 10 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழிநடத்தும் திருப்பலியுடன் இந்த மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியானது நிறைவு பெற இருக்கின்றது.

இத்திருப்பலியின்போது இத்தாலி, இஸ்பெயின், இங்கிலாந்து, போர்த்துக்கல், பிரேசில், மெக்சிகோ, இந்தியா, தென்கொரியா, கிழக்குத்திமோர், ஐக்கிய அரபு நாடுகள், பிலிப்பீன்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள், மொசாம்பிக், பெரு, தொமினிக்கன் குடியரசு நாடுகள் ஆகியவற்றை சார்ந்த 39 பேர் புதிய மறைக்கல்வியாளர்களாக திருத்தந்தையிடமிருந்து திருச்சிலுவையினை அடையாளச் சின்னமாகப் பெற இருக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 செப்டம்பர் 2025, 16:06