"காசாவில் அமைதி நிலவ" செப வழிபாட்டிற்கு கர்தினால் பிட்சாபால்லா காணொளிச்செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
காசாவில் வாழும் மக்கள் நிகழும் சூழல் அறிந்து மனம் உடைந்து, துயரமான வாழ்க்கை நிகழ்வுகளை அனுபவிக்கின்றனர் என்றும், வன்முறையை உருவாக்கிய வெறுப்பின் சூழலால் ஆழமாக காயமடைந்துள்ளனர், உடைக்க முடியாத இந்த தீய சுழற்சி அதிக வெறுப்பை வளர்க்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சா பால்லா.
செப்டம்பர் 22, திங்கள் இரவு உரோமில் சன் எஜிதியோ சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கத்தோலிக்க சங்கங்களின் பரந்த வலையமைப்பால் ஊக்குவிக்கப்பட்ட "காசாவிற்கு அமைதி" செப விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வழங்கிய காணொளிச்செய்தியில் இவ்வாறு எடுத்துரைத்துள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிட்சா பால்லா.
வன்முறை மற்றும் போர்ச்சூழலால் இருக்கும் இடத்தை விட்டு ஒவ்வோர் இடமாக மக்கள் சென்று கொண்டே இருக்கின்றனர் என்றும், பிரான்சிஸ்கன் சபை துறவியாக புனித பூமியில் 35 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் இவ்வளவு கடினமான தருணத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் நினைவு கூர்ந்தார் கர்தினால் பிட்சா பால்லா.
இறைவன் நமக்குக் கொடையாக அளித்த அழகு நிறைந்த புனித பூமியை அன்பு மற்றும் சாந்த குணத்துடன் திரும்பப்பெற நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பிட்சா பால்லா அவர்கள், நம் வார்த்தைகளாலும் சான்றுள்ள வாழ்வாலும் இந்த அமைதியின் வலிமையைக் கொண்டுவர வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
எப்போது அமைதியான சூழல் நிலவும் என்று யாருக்கும் தெரியாது இருப்பினும் நம்பிக்கை நிறைந்த நமது எதிர்காலத்தை படிப்படியாக மீண்டும் கட்டியெழுப்ப நம்மால் முடியும், அமைதியின் நெசாவாளர்களாக ஓர் துணியை நம்மால் உருவாக்க முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பிட்சா பால்லா.
நாம் நீதியைச் செய்ய வேண்டும், அனைவருக்கும் அன்புடன் உண்மையைச் சொல்ல வேண்டும் அதற்கான காலம் வரும் என்பதை வலியுறுத்தியுள்ள கர்தினால் பிட்சா பால்லா அவர்கள், "வலிமையின் மொழி தோல்வியடையும் போது, வன்முறையின் இந்த முழு கோட்டையும் இடிந்து விழும் போது, நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்