தேடுதல்

கர்தினால் Kurt Koch கர்தினால் Kurt Koch 

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான வாய்ப்பு!

'நாம் பல்வேறுபட்டவர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவில் ஒன்றுபட்டுள்ளோம்' என்ற திருத்தந்தையின் விருதுவாக்கை வெளிப்படுத்தும் வகையில், இந்தத் திருத்தூதுப் பயணம் உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்பை வலுப்படுத்தும் : கர்தினால் Kurt Koch.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும்  திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, நவம்பர் 24, இத்திங்களன்று, கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில், இது முதல் நீசேயா திருச்சங்கத்தின் 1700 - வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

இயேசு கிறிஸ்துவின் இறைஇயல்பில் நம்பிக்கையை நிலைநாட்டிய இந்தத் திருச்சங்கம், இன்றும் கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக உள்ளது என்றும் கூறிய கர்தினால் Koch அவர்கள், இயேசுவின் இறைஇயல்பையும், கிறிஸ்தவர்களிடையே அது ஊக்குவிக்கக்கூடிய ஒன்றிப்பையும்  உறுதிப்படுத்துவதில்தான் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் உள்ளது என்று வலியுறுத்தினார்.

'நாம் பல்வேறுபட்டவர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவில் ஒன்றுபட்டுள்ளோம்' என்ற திருத்தந்தையின் விருதுவாக்கை வெளிப்படுத்தும் வகையில், இந்தத்   திருத்தூதுப் பயணம் உலகளாவிய கிறிஸ்தவ ஒன்றிப்பை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார் கர்தினால் Kurt Koch.

இறையியல் பிளவுகளைக் கடந்து, கிறிஸ்துவில் பகிரப்பட்ட நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதில் முதல் நீசேயா திருச்சங்கத்தின் முக்கியத்துவம் குறித்தும்  எடுத்துரைத்தார் கர்தினால் Koch.

இறுதியாக, துருக்கிக்கும் லெபனோனுக்கும் திருத்தந்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பயணங்கள், அங்குள்ள கிறிஸ்தவச் சமூகங்களிடையே உறவின் ஒன்றிப்பைக் காட்டும் ஓர் அடையாளமாக இருக்கும் என்றும் குறிப்பாக, கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் அல்லது அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் பகுதிகளில் இந்த அடையாளம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்  கூறி தனது நேர்காணலை நிறைவு செய்தார் கர்தினால் Koch.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 நவம்பர் 2025, 13:00