தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்   (AFP or licensors)

புனித பேதுரு பெருங்கோவிலின் 400-வது ஆண்டு விழா!

"வரலாற்றை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், எதிர்வரும் தலைமுறைகளுக்கு இப்பெருங்கோவில் தொடர்ந்து திருப்பயணிகளை வரவேற்பதை உறுதி செய்வதையும் இந்த ஆண்டுவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது" : கர்தினால் கம்பெத்தி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பேதுரு பெருங்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதன் 400-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வத்திக்கான் ஓராண்டுகால ஆன்மிக, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளின் திட்டத்தை அறிவித்துள்ளது.

செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய புனித பேதுரு பெருங்கோவிலின் தலைமைப்பீடப் பணியாளர் கர்தினால் மௌரோ கம்பெத்தி (Mauro Gambetti) அவர்கள்,  கொண்டாட்டங்கள் பிப்ரவரி 20, வெள்ளியன்று  புதிய சிலுவைப் பாதையின் திறப்பு விழாவுடன் தொடங்கி நவம்பர் 18, புதன்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் ஒரு திருப்பலியுடன் நிறைவடையும் என்றார்.

"சிறப்பம்சங்களாக, தகவல்தொடர்புத் திருப்பீடத்துறை மற்றும் AI நிறுவனமான டிரான்ஸ்லேட்டட் (Translated) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பன்மொழி வழிபாட்டுத் தளம், திறன்பேசி (smartphone) வழியாக முக்கிய கொண்டாட்டங்களின் நிகழ்நேர மொழிபெயர்ப்புகளை வழங்குகிறது" என்றும் தெரிவித்தார் கர்தினால்.

"பார்வையாளர்கள் முன்பு மூடப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கான அணுகலைப் பெறுவார்கள்" என்றும், "இதில் இத்தாலியக் கட்டிடக் கலைஞர் அந்தோனியோ தா சங்கல்லோ மற்றும் மைக்கேலேஞ்சலோவின் படைப்புகளைக் காண்பிக்கும் எண்கோண அரங்குகள் அடங்கும்" என்றும் எடுத்துரைத்தார் கர்தினால்.

"கூடுதல் முயற்சியாக.  "ஸ்மார்ட் பாஸ்" முன்பதிவு அமைப்பு, வாராந்திர இறைவேண்டல் மற்றும் இசை நிகழ்வுகள், புனிதர்கள் பீட்டர் மற்றும் பவுலுடன் இணைக்கப்பட்ட உரோமையில் ஒரு திருப்பயண பாதை மற்றும் எரிசக்தி நிறுவனமான எனியுடன் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு கண்காணிப்பு திட்டம் ஆகியவை இதை அடங்கும்" என்றும், "மைக்கேலேஞ்சலோவின் கையெழுத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய எழுத்துருவும் வெளியிடப்படும்" என்றும் உரைத்தார்.

"வரலாற்றை நினைவுகூர்வது மட்டுமல்லாமல், எதிர்வரும் தலைமுறைகளுக்கு இப்பெருங்கோவில் தொடர்ந்து திருப்பயணிகளை வரவேற்பதை உறுதி செய்வதையும் இந்த ஆண்டுவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினார் கர்தினால் கம்பெத்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 பிப்ரவரி 2026, 11:31