தேடுதல்

கர்தினால் பியத்ரோ பரோலின் கர்தினால் பியத்ரோ பரோலின்   (ANSA)

ஆயுதங்களால் அமைதியை நிலைநாட்ட முடியாது

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதுகாப்பதுடன், புலம்பெயர்ந்தோர் மற்றும் வறுமையில் உள்ளவர்களையும் சமமாகப் பாதுகாக்கும் ஒரு முழுமையான வாழ்விற்கு ஆதரவான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

அனைத்துலக சட்டம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சுமூக உறவை விட இராணுவ பலமும் இரட்டை நிலைப்பாடுகளும் மேலோங்கி நிற்கும் நவீன கால வலிமையானவர்களின் தர்க்கத்தை திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் விமர்சித்துள்ளார்.

ஒரு இத்தாலிய இதழுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைன் மற்றும் காசா அழிவு குறித்து உலக நாடுகள் காட்டும் எதிர்வினைகளில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியதுடன் உலகம் அதிகாரம் சார்ந்த ஒரு பல்முனை அரசியலுக்குள் பின்வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் "ஆயுதமற்ற அமைதி" என்ற கருத்தை முன்னிலைப்படுத்திப் பேசியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், பாதுகாப்பு என்பது ஆயுதங்களால் குறிப்பாக அணு ஆயுதங்களால்  கிடைக்கிறது என்ற கருத்தை நிராகரித்து, இத்தகைய கருத்துக்களை "மரண வியாபாரிகளால்" தூண்டப்படும் ஒரு ஆபத்தான கற்பனைவாதம் என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

ஐரோப்பாவில் நிலவும் பனிப்போர் சூழல், லெபனோனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமானப் பேரழிவு மற்றும் சீனா தொடர்பான திருஅவையின் பொறுமையின் மறைசாட்சித் தன்மை உள்ளிட்ட பல்வேறு புவிசார் அரசியல் நெருக்கடிகளை கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதுகாப்பதுடன், புலம்பெயர்ந்தோர் மற்றும் வறுமையில் உள்ளவர்களையும் சமமாகப் பாதுகாக்கும் ஒரு முழுமையான வாழ்விற்கு ஆதரவான (pro-life) நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஏப்ரல் 2026, 14:36