தேடுதல்

கர்தினால் பியத்ரோ பரோலின் கர்தினால் பியத்ரோ பரோலின்   (ANSA)

மாற்றத்தை முன்னெடுக்கும் தூதர்களாக கத்தோலிக்கர்கள் செயல்பட வேண்டும் : கர்தினால் பரோலின்

திருத்தந்தை துயரங்கள் நிறைந்த இடங்களுக்குச் சென்று வறுமை, சமத்துவமின்மை மற்றும் மோதல்களை எதிர்கொள்ளும் சமூகங்களைச் சந்திப்பார் குறிப்பாக, இளைஞர்களிடையே நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கடினமான சூழலில் வாழும் மக்களுக்கு கிறிஸ்துவின் நம்பிக்கையை கொண்டு செல்லும் பொருட்டு,  ஏப்ரல் 13 முதல் 23 வரை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் ஆப்பிரிக்காவிற்கான திருத்தூதுப் பயணம் அமையும் என்று  திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 11, சனிக்கிழமையன்று வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இந்தத் திருத்தூதுப் பயணம் அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது என்றும், இது அமைதி, உரையாடல், புலம்பெயர்வு, சுற்றுச்சூழல் மற்றும் குடும்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தத் திருத்தூதுப் பயணத்தின் போது திருத்தந்தை, துயரங்கள் நிறைந்த இடங்களுக்குச் சென்று வறுமை, சமத்துவமின்மை மற்றும் மோதல்களை எதிர்கொள்ளும் சமூகங்களைச் சந்திப்பார் என்றும், குறிப்பாக இளைஞர்களிடையே நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பார் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அல்ஜீரியாவிற்கான  திருத்தந்தையின் பயணம் மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிக்கும் அதே வேளையில், கேமரூன் மற்றும் அங்கோலா நாடுகளுக்கான வருகைகள் அமைதி மற்றும் சமூக நீதியை முன்னிலைப்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், எக்குவடோரியல் கினியாவில், அவர் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களிடையே  நம்பிக்கையை வலுப்படுத்துவார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும் கத்தோலிக்கர்கள் நீதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சியைத் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் கர்தினால் பரோலின் அவர்கள், கல்வி, தொண்டு மற்றும் ஒழுக்க நெறிமுறை உருவாக்கத்தில் திருஅவையின் பங்கினை வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தையின்  வருகை தூதரக  முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதுடன், அமைதியான, நீதியான மற்றும் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்காவை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஏப்ரல் 2026, 14:34