தேடுதல்

பாகிஸ்தான் திருஅவை சவால்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையுடன் பயணிக்கிறது!

வத்திக்கானுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் (Ad limina) மேற்கொண்ட பாகிஸ்தான் ஆயர்கள், அங்குள்ள பல்வேறு துறைகளைச் சந்தித்துத் தங்கள் நாட்டின் சூழல் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். இந்தச் சந்திப்பு தங்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக ஆயர் சாம்சன் ஷுகார்டின் தெரிவித்துள்ளார்

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வத்திக்கானுக்கான தங்களது 'அத் லிமினா' (ad limina Apostolorum) அதிகாரப்பூர்வ வருகையின் போது, பாகிஸ்தான் ஆயர்கள் அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களைச் சுட்டிக்காட்டிய அதே வேளையில், திருஅவையின் எதிர்காலம் குறித்த தங்களது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

வத்திக்கான் அதிகாரிகளைச் சந்தித்து, பாகிஸ்தானில் திருஅவை சந்திக்கும் சூழல்கள் குறித்த அறிக்கைகளை வழங்கிய இந்தத் தங்களது பயணம், தங்களுக்கு புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் தந்துள்ளதாக தெரிவித்த ஆயர் சாம்சன் ஷுகார்டின் அவர்கள், வத்திக்கானின் பல்வேறு துறைகள் தங்களுக்குச் சாதகமான, நம்பிக்கையூட்டும் பதில்களை அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

வறுமையிலும் படிப்பறிவில்லாமலும் இருந்தாலும், நம்பிக்கையில் உறுதியாகவும் கடின உழைப்பாளிகளாகவும் வாழும் கத்தோலிக்க மக்களிடையே நற்செய்தியைத் கொண்டு சேர்ப்பது திருஅவை க்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது என்று கூறிய ஆயர் ஷுகார்டின் அவர்கள், அதே வேளையில், அங்குள்ள பல கிறிஸ்தவர்கள் தொடர்ந்து சமூகப் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படுவதோடு, அவர்களுக்கான சம உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள மத சிறுபான்மையினரை அடிக்கடி பாதிக்கும் மதநிந்தனைக் (blasphemy) குற்றச்சாட்டுகள் மற்றும் கட்டாய மதமாற்றங்கள் குறித்து கவலை தெரிவித்த ஆயர் ஷுகார்டின் அவர்கள், கிறிஸ்தவர்கள் தங்களது நம்பிக்கையினாலும் சாட்சிய வாழ்வினாலும் சில நேரங்களில் சமூகப் புறக்கணிப்பையும் இன்னல்களையும் (persecution) எதிர்கொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இவ்வளவு துயரங்கள் இருந்தாலும், அங்குள்ள திருஅவையின் எதிர்காலம் குறித்து ஆயர்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்றும், எங்கள் திருஅவை கடினமான சூழ்நிலையைக் கடந்து சென்றாலும், நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் குறிப்பிட்ட ஆயர் ஷுகார்டின் அவர்கள், பாகிஸ்தான் கிறிஸ் தவர்களுக்கு ஒரு நாள் சம உரிமைகளும் முழுமையான நீதியும் நிச்சயம் கிடைக்கும் என்ற தனது உறுதியான நம்பிக்கையையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மே 2026, 12:11