தேடுதல்

கர்தினால் Mario Grech அவர்கள் ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற கத்தோலிக்க திருவிழாவின்போது உரை வழங்கினார் கர்தினால் Mario Grech அவர்கள் ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற கத்தோலிக்க திருவிழாவின்போது உரை வழங்கினார் 

ஜெர்மனி திருஅவைக்குத் திருத்தந்தை ஒரு நல்ல தந்தை

ஜெர்மனி திருஅவையின் செயல்பாடுகளைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மிக நெருக்கமாகக் கவனித்து வருவதாகவும், ஆயர்களைத் தனது உடன் பணியாளர்களாகக் கருதி ஒரு நல்ல தந்தையைப் போல அவர்களுக்குத் துணையாக இருப்பதாகவும் கர்தினால் Grech அவர்கள் குறிப்பிட்டார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஜெர்மனி திருஅவையின் செயல்பாடுகளைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறார் என்றும், ஒரு நல்ல தந்தையைப் போல அவர் உள்ளூர் திருஅவைகளுக்குத் துணையாக இருக்கிறார் என்றும் ஆயர் மாமன்றத்தின் பொது செயலரான கர்தினால் Mario Grech அவர்கள் தெரிவித்துள்ளார்.

மே 13 முதல் மே 17 வரை ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற கத்தோலிக்க  திருவிழாவின்போது (Katholikentag) வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் Grech அவர்கள், திருத்தந்தை ஆயர்களைத் தனது உடன் பணியாளர்களாக மதித்து, அவர்களுக்குத் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கர்தினால் Grech அவர்கள், இந்நிகழ்வு  ஒரு செயலற்ற திருஅவையைக் காட்டாமல், மிக உயிரோட்டமுள்ள ஒரு திருஅவையை வெளிப்படுத்துவதால் தனக்குப் பெரும் நம்பிக்கையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் திருஅவைக்குள் பல கேள்விகளும் விவாதங்களும் இருப்பதை ஏற்றுக்கொண்ட கர்தினால் அவர்கள், அத்தகைய விவாதங்கள் பயத்தையோ அல்லது மனச்சோர்வையோ ஏற்படுத்தக்கூடாது என்றும், மாறாக, அவை புரிதலை ஆழப்படுத்துவதற்கும் நம்பிக்கையில் தொடர்ந்து இணைந்து பயணிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜெர்மன் திருஅவை மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த கர்தினால் Grech அவர்கள், மாமன்றத் தன்மையை நோக்கிய பயணத்தில் ஜெர்மன் ஆயர்கள் தைரியமான மேய்ப்பர்களாகச் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

சொந்த விருப்பங்களை நாடாமல், கடவுளின் திருவுளத்தைத் தேடுவதற்கு மாமன்றத் தன்மைக்கு ஆழமான ஆன்மீகம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாமன்றத்தின் இறுதி ஆவணத்தை உள்ளூர் திருஅவைகள் நடைமுறைப்படுத்துவதற்கும், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திருஅவைக் கூட்டத்திற்குத் தயாராவதற்கும் தேவையான புதிய வழிகாட்டுதல்களை மாமன்றச் செயலகம் விரைவில் வெளியிடும் என்று Grech அவர்கள் தெரிவித்து தனது நேர்காணலை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2026, 12:08