தேடுதல்

 புத்தகக் கண்காட்சி புத்தகக் கண்காட்சி  (ANSA)

தூரின் புத்தகக் கண்காட்சியில் வத்திக்கானின் சாதனைப் பயணம்!

வத்திக்கான் பதிப்பகம் (LEV) தனது 100-வது ஆண்டு தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, தூரின் (Turin) பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் நான்கு முக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

"2026-ஆம் ஆண்டில் தனது 100-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வத்திக்கான் பதிப்பகம், அதனைச் சிறப்பிக்கும் வகையில் தூரின் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் நான்கு முக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளது."

இந்த நிகழ்வுகளில் திருஅவைத் தலைவர்களும் கலாச்சார பிரமுகர்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவம், ஆன்மீகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிறிஸ்தவ சான்று வாழ்வு குறித்து கலந்துரையாட உள்ளனர்.

மே 14, வியாழனன்று, வத்திக்கான் செய்தித் தொடர்புத் துறையின் ஆசிரியர் அந்திரேயா தொர்னியெல்லி அவர்களின் தலைமையில் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதில் அல்ஜீரிய கர்தினால் ஜீன்-பால் வெஸ்கோ மற்றும் கலை வரலாற்று ஆய்வாளர் டோமாசோ மொண்டனாரி ஆகியோர் கலந்துகொண்டு, 'சகோதரத்துவம் துணிச்சலான மக்களுக்கானது' என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவர். கர்தினால் வெஸ்கோ எழுதிய 'சகோதரத்துவத்தின் துணிச்சல்' (The Audacity of Fraternity) என்ற நூலை மையமாக வைத்து இந்த விவாதம் அமையவுள்ளது.

மே 15, வெள்ளியன்று, 'வியப்பு உலகைக் காப்பாற்றுமா?' என்ற தலைப்பிலான ஒரு சிறப்புச் சிந்தனை அமர்வு நடைபெறவுள்ளது. இதில் கர்தினால் ஜோஸ் டோலெண்டினோ மென்டோன்கா மற்றும் மனோதத்துவ ஆய்வாளர் விட்டோரியோ லிங்கியார்டி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில், ஆன்மீக நம்பிக்கையும் கலாச்சாரமும் எவ்வாறு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது குறித்து இவர்கள் விவாதிக்கவுள்ளனர். கியுலியா கலியோட்டி அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பார்.

மே 16, சனிக்கிழமையன்று, அருள்பணி ஜோசப் L. ஃபாரல் மற்றும் ஊடகவியலாளர் அனாலிசா குஸோக்ரியா ஆகியோர் "திருத்தந்தை பதினான்காம் லியோ: அமைதியற்ற இதயத்தின் மொழி" எனும் தலைப்பில் உரையாடுவார்கள். ராபர்ட் F. ப்ரவோஸ்டின் ஆரம்பகால எழுத்துக்கள் மற்றும் அருள் வாழ்வை மையமாகக் கொண்ட இந்த உரையாடலை சமூகத் தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி அவர்கள் வழிநடத்த உள்ளார்.

மே 18 திங்களன்று, பிரான்சுவா வேய்ன் மற்றும் ஆயர் எரியோ காஸ்டெலூசி ஆகியோர் அல்ஜீரியாவில் மறைசாட்சிகளாக மரித்த திப்ஹிரின் துறவிகளின்  நினைவுகளைப் போற்றும் வண்ணம் கலந்துரையாடலில் ஈடுபடுவர்.

ஆஃப் லெவ் கண்காட்சியில் அல்ஜீரிய மறைசாட்சிகள் குறித்த ஒரு கண்காட்சியும், கர்தினால் வெஸ்கோவின் சிறப்பு உரையும் இடம்பெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2026, 11:54