தேடுதல்

நம்பிக்கைக் கோட்பாட்டு பேரவையின் தலைமையகம் நம்பிக்கைக் கோட்பாட்டு பேரவையின் தலைமையகம் 

வத்திக்கானின் தடையை மீறி 2026-இல் புதிய ஆயர்களை நியமிக்கவிருக்கும் FSSPX சபை

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வேண்டுகோளையும் மீறி, வரும் 2026 ஜூலை மாதம் புதிய ஆயர்களை நியமிக்கப்போவதாக புனித பத்தாம் பயஸ் குருத்துவ சபை (FSSPX) அறிவித்துள்ளது.

ஜான்சிராணி அருளாந்து

ஆயர் மார்செல் லெபெவ்ரே அவர்களால்  (Archbishop Marcel Lefebvre) தொடங்கப்பட்ட புனித பத்தாம் பயஸ் குருத்துவ சபை (FSSPX), திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வேண்டுகோளையும் மீறி, வரும் 2026 ஜூலை மாதம் புதிய ஆயர்களை நியமிக்கப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நியமனங்கள் திருத்தந்தையின் (Papal approval) அங்கீகாரம் இன்றி நடைபெற உள்ளன.

மே 13, புதனன்று, நம்பிக்கைக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் அவர்கள், திட்டமிடப்பட்டுள்ள ஆயர் நிலைப் பொறுப்பேற்புகளுக்குத் தேவையான திருத்தூது ஆணை (Pontifical Mandate) இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் இறைவனின் திருச்சபை (Ecclesia Dei) எனும் திருத்தூது மடலை மேற்கோள் காட்டி, இச்செயல் ஒரு 'பிளவுண்டாக்கும் செயல்' (Schismatic act) என அமையும் என்றும் கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

பிளவுண்டாக்கும் செயலில் (Schism) முறைப்படி இணைவது என்பது இறைவனுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுவதோடு, திருச்சபைச் சட்டத்தின்படி 'சபையை விட்டு நீக்கும்' (Excommunication) தண்டனைக்கும் உரியது என்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

FSSPX சபையின் தலைவர்கள் எடுத்துள்ள இந்த ‘மிகவும் விபரீதமான முடிவை’ அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருவதாகத்  தெரிவித்த கர்தினால் பெர்னாண்டஸ் அவர்கள், அச்சபையின் தலைவர்கள் கத்தோலிக்கத் திருஅவையோடு மீண்டும் இணைந்து செயல்படத் தூய ஆவியார் வழிகாட்ட வேண்டும் என்று திருத்தந்தை இறைவேண்டல் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2026, 13:38