51 மில்லியன் யூரோ லாபத்தை ஈட்டிய வத்திக்கான் வங்கி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மே 11, திங்களன்று, மதப் பணிகளுக்கான நிறுவனம் (IOR) என்று அழைக்கப்படும் வத்திக்கானின் வங்கி தனது 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு அதன் மிக வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
IAS-IFRS சர்வதேச கணக்கியல் தரநிலைகளுக்கு இணங்கத் தயாரிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை, 2025 ஆம் நிதியாண்டில் 51 மில்லியன் யூரோக்களை நிகர லாபமாகக் கணக்கிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 55.5 விழுக்காடு வளர்ச்சியாகும். மேம்பட்ட செயல்பாடுகள், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முதலீட்டு மேலாண்மை, சாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் வாடிக்கையாளர் சொத்துக்களின் மதிப்பு உயர்வு ஆகியவையே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியின் வாடிக்கையாளர் சொத்து மதிப்பு 2024 இல் 5.7 பில்லியன் யூரோக்களிலிருந்து 2025 இல் 5.9 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வத்திக்கான் வங்கியின் இடைநிலை இலாபம் (Intermediation margin) 66.3 மில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ள அதே வேளையில் அதன் முதல் அடுக்கு மூலதன அளவீட்டு விகிதம் (Tier 1 capital ratio) 71.9% ஐ எட்டியுள்ளது. இது வங்கியின் வலுவான நிதி நிலைத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. வங்கியின் நிகர சொத்து மதிப்பும் 815.3 மில்லியன் யூரோக்களாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதையும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட நிறுவனத்தின் விவேகமான உத்தியை இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இந்த முடிவுகளைத் தொடர்ந்து, கர்தினால்கள் ஆணையம் 24.3 மில்லியன் யூரோ ஈவுத்தொகையை திருத்தந்தைக்கு அளிக்க முன்வந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டை விட 76.1 விழுக்காடு அதிகமாகும். இத்தொகை சமயப் பணிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்காக பயன்படுத்தப்படும்.
மேலும் கத்தோலிக்க சமூகப் போதனைகளால் வழிநடத்தப்படும் அறநெறி முதலீடுகளுக்கான தனது அர்ப்பணிப்பையும் அந்த நிறுவனம் முன்னிலைப்படுத்தியுள்ளது. அத்துடன் விடிவெள்ளி நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய கத்தோலிக்க முதலீட்டு குறியீடுகளைத் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்த பிறகு, ஜீன்-பாப்டிஸ்ட் டி ஃபிரான்சு தனது தலைவர் பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்குப் பின் ஃபிரான்சுவா பாலி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்