தேடுதல்

செயற்கை நுண்ணறிவும் அணுவாயுதப் போரும்: காஸ்தல் காந்தோல்ஃபோவில் உலக நோபல் பேரவை தொடக்கம்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' (Magnifica Humanitas) திருத்தூது மடலின் ஊக்கத்தால், செயற்கை நுண்ணறிவு மற்றும் அணுவாயுதப் போர் குறித்த உலகளாவிய நோபல் பரிசு பெற்றவர்களின் மூன்று நாள் பேரவை காஸ்தல் காந்தோல்ஃபோவில் தொடங்கியது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' (Magnifica Humanitas) என்ற திருத்தூது மடலின் ஊக்கத்தால், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் அணுவாயுதப் போர் குறித்த உலகளாவிய நோபல் பரிசு பெற்றவர்களின் மூன்று நாள் பேரவை ஜூலை 14, செவ்வாயன்று, காஸ்தல் காந்தோல்ஃபோவில் உள்ள திருத்தந்தையின் தோட்டத்தில் தொடங்கியது.

இப்பேரவையில் நோபல் பரிசு வென்ற 200-க்கும் மேற்பட்டவர்கள், முன்னாள் அரசுத் தலைவர்கள், பல்கலைக்கழகத் தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஜூலை 16, வியாழன் வரை இடம்பெறும் இந்த பேரவையின் நோக்கம், 'ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களைக் கைவிடும் அமைதிக்கான உரோம் அறிவிப்பை' (Rome Declaration on an Unarmed and Disarming Peace) மேம்படுத்துவதாகும். இது செயற்கை நுண்ணறிவு, அணு ஆயுதங்கள், தன்னாட்சி தொழில்நுட்பங்கள் மற்றும் எண்ணிம வளர்ச்சி ஆகியவற்றின் நெறிமுறை சார்ந்த நிர்வாகத்திற்கான கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அறிவிப்பு மனித மாண்பு, ஒத்துழைப்பு, முழுமையான வளர்ச்சி மற்றும் அமைதி ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

'அணுவாயுத யுகத்தில் மனிதகுலத்தின் பலவீனம்', 'மனிதகுலத்தின் நலனுக்கான தொழில்நுட்பம்', 'செயற்கை நுண்ணறிவும் போரும் ஏற்படுத்தும் அறநெறிச் சவால்கள்' ஆகிய கருப்பொருள்களில் இப்பேரவையில் விவாதங்கள் நடைபெறுகின்றன. பேரவையின் முதல் இரண்டு நாள்கள் காஸ்தல் காந்தோல்ஃபோவில் உள்ள போர்கோ லவுதாத்தோ ஸீ (Borgo Laudato Si') வளாகத்தில் நடைபெறுகின்றன. இறுதி நாள் அமர்வு உரோம் மாநகராட்சியின் தலைமையகமான கேப்பிட்டோலின் குன்றில் (Capitoline Hill) நடைபெறவுள்ளது.

வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சிதைந்த உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை பகிரப்பட்ட அறநெறிக் கொள்கைகளை உடனடியாக அவசியமாக்குகின்றன என்று முழுமையான மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறையின் துணைச் செயலாளராகவும், லௌதாதோ சி' மையத்தின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றும் கர்தினால் பா பியோ பாஜியோ அவர்கள் வலியுறுத்தினார்.

இப்பேரவை குறித்து கருத்து தெரிவித்துள்ள டோமுஸ் கம்யூனிஸ் (Domus Communis) அறக்கட்டளையின் தலைவரான கர்தினால் சில்வானோ மரியா டோமாசி அவர்கள், இந்தப் பேரவை இடர்களை அடையாளம் காண்பதற்காக மட்டுமல்ல, மாறாக நம்பிக்கையைப் புதுப்பிக்கவும், உரையாடலை ஊக்குவிக்கவும், மனிதகுலம் தனது எதிர்காலத்தை பொறுப்புணர்வுடன் வடிவமைப்பதை உறுதிப்படுத்தவும் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

"நமது பொதுவான இல்லத்தின் எதிர்காலத்திற்கான மகத்தான மானுடம்" என்ற தலைப்பிலான தொடக்க அமர்வில் கர்தினால் ஏஞ்சல் பெர்னாண்டஸ் ஆர்டிம் மற்றும் பல பன்னாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். நோபல் அமைதிப் பரிசு பெற்ற ஜுவான் மானுவல் சாண்டோஸ் அவர்கள், "செயற்கை நுண்ணறிவின் ஆயுதங்களைக் குறைக்குமாறு" திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் விடுத்த அழைப்பை எதிரொலித்த அதேவேளை செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்குச் சேவை செய்வதை உறுதி செய்ய பயனுள்ள உலகளாவிய நிர்வாகத்தை வலியுறுத்தினார்.

ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்குவதில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

நோபல் அமைதிப் பரிசு பெற்ற மரியா ரெஸ்ஸா, ஆந்த்ரோபிக் (Anthropic) மற்றும் டீப்மைண்ட் (DeepMind) நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள், நெறிமுறைகள், அறிவியல் மற்றும் மனித உரிமைகள் துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் பங்கேற்ற "செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுத்தல்" குறித்த கலந்துரையாடல்களுடன் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூலை 2026, 12:28