அணுஆயுத ஒழிப்புக்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: மெலிசா பார்க்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
அணுஆயுதங்களை ஒழிப்பதற்கான அனைத்துலக விழிப்புணர்வு இயக்கத்தின் (ICAN) நிர்வாக இயக்குநர் மெலிசா பார்க் அவர்கள், அணுஆயுதத் தடுப்பு குறித்த உரையாடல், தூதரக உறவுகள் மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்குமாறு உலகத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
காஸ்தல் கந்தோல்ஃபோவில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் அணுஆயுதப்போர் குறித்த உலகளாவிய நோபல் பரிசு பெற்றவர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது இவ்வாறு கூறிய அவர், பேரழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு நீடித்த அமைதியை உருவாக்க முடியாது என்றும் வாதிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ஈரான் மோதல்கள் உள்ளிட்ட அண்மையில் இடம்பெறும் மோதல்கள், அணுஆயுதங்களால் போரைத் தடுக்கவோ அல்லது அமைதியை நிலைநாட்டவோ இயலாது என்பதை நிரூபித்துள்ளதாக கூறிய பார்க் அவர்கள், "மாறாக, இவை பெரும் வளங்களை வீணடிப்பதால் மனிதகுலத்தின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக நீடிக்கின்றன" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் வலுவிழந்து வருவதால் அணுஆயுத அச்சுறுத்தல்கள் அதிகரிப்பது மற்றும் புதிய ஆயுதப் போட்டி உருவாகுவது போன்ற சூழல்கள் நிலவுவதாகவும், இதனால் உலகளாவிய நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் எச்சரித்ள்ளார்.
"இராணுவ அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிப்பது, அணுஆயுத மோதலுக்கான ஆபத்தை மேலும் உயர்த்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பொதுமக்கள் மீது ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்த பார்க் அவர்கள், சாதாரண மக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களால் அதிகமான மனிதர்கள் துயர் மிகுந்த சூழலுக்கு தள்ளப்படுவதாகவும், இதுபோன்ற சூழல்கள் அமைதியான வழிகள் மூலம் மோதல்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
அணுஆயுத ஒழிப்பு மற்றும் பொறுப்புடன் செயற்கை நுண்ணறிவைக் கையாளுதல் ஆகியவற்றை அறநெறிப் பொறுப்புகள் என்று குறிப்பிட்ட அவர், அணுஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இணையுமாறு நாடுகளைக் கேட்டுக்கொண்டார். இதற்கு வத்திக்கான் முதன்முதலில் ஒப்புதல் அளித்த நாடாகத் திகழ்வதை அவர் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை, பன்முக ஒத்துழைப்பு, அனைத்துலகச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் மாண்பிற்கு மதிப்பளிப்பது மட்டுமே நீடித்த அமைதிக்கான ஒரே வழி என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.