தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

அரசியல் தலைவராக அல்ல, நற்செய்தியை அறிவிக்கும் உலகளாவிய மேய்ப்பராக திருத்தந்தை!

போர், அமைதி, இடம்பெயர்வு, செயற்கை நுண்ணறிவு, வறுமை போன்ற உலகப் பிரச்சினைகள் குறித்து திருத்தந்தை பேசும்போது, அவர் ஒரு நாட்டின் தலைவராக அல்ல, நற்செய்தியையும் திருஅவையின் சமூகப் போதனையையும் அறிவிக்கும் உலகளாவிய மேய்ப்பராகவே உரையாற்றுகிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

போர், அமைதி, இடம்பெயர்வு அல்லது செயற்கை நுண்ணறிவின் காலத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேசும்போதும், திருத்தூதர் புனித பேதுருவின் வாரிசான திருத்தந்தை, முதன்மையாக ஒரு ஆன்மிகத் தலைவராகவே செயல்படுகிறார். 1929ஆம் ஆண்டு லேட்டரன் ஒப்பந்தத்தின் மூலம் வத்திக்கான் நகரின் இறையாண்மையுடைய தலைவராக அவர் விளங்கினாலும், மனிதகுலப் பிரச்சினைகள் குறித்து அவர் ஒரு அரசியல் தலைவராகப் பேசுவதில்லை.

1965ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், வத்திக்கான் நகரின் இறையாண்மை, திருத்தந்தை தனது ஆன்மிகப் பணியை முழு சுதந்திரத்துடன் நிறைவேற்றுவதற்காக மட்டுமே வழங்கப்பட்டதாக விளக்கினார். உலக அரசுகளுடன் போட்டியிடவோ, அரசியல் அதிகாரத்தை நாடவோ திருத்தந்தைக்கு எந்த விருப்பமும் இல்லை; மாறாக, தாழ்மையுடனும் தன்னலமற்ற அன்புடனும் மனிதகுலத்திற்குச் சேவை செய்வதே அவரது நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதே கருத்தை, பின்னர் திருத்தந்தை ஆறாம் பவுலாக உயர்ந்த கர்தினால் ஜியோவன்னி பட்டிஸ்தா மொந்தினி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்குவதற்கு முன்பு 1962ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் வலியுறுத்தினார். 1870ஆம் ஆண்டு திருத்தந்தையரின் உலகியல் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், திருஅவை நற்செய்தியை அறிவிக்கும் ஆசிரியராகவும், உலகிற்கு அறநெறி வழிகாட்டும் குரலாகவும் முன்பைவிட வலிமை பெற்றது என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, மனித உயிரின் மாண்பைப் பாதுகாப்பது, போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது, ஆயுதப் போட்டியை நிறுத்துவது, இடம்பெயர்ந்தோரை மனித மாண்புடன் வரவேற்பது, ஏழைகளுக்கான அக்கறை, சமயச் சுதந்திரம் மற்றும் படைப்பைப் பாதுகாப்பது குறித்து திருத்தந்தை பேசும்போது, அவர் ஒரு நாட்டின் தலைவராகப் பேசுவதில்லை. மாறாக, நற்செய்தியையும் திருஅவையின் சமூகப் போதனையையும் அறிவிக்கும் உலகளாவிய மேய்ப்பராகவே உரையாற்றுகிறார். அவரது ஒவ்வொரு அழைப்பும் அன்பு, சகோதரத்துவம், நீதி மற்றும் ஆயுதமற்ற மற்றும் ஆயுதங்களை அகற்றும் அமைதி” என்ற நற்செய்தியின் செய்தியை உலகிற்கு எடுத்துரைப்பதாகும்.

அந்திரேயா தொர்னியெல்லி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஜூலை 2026, 12:18