தேடுதல்

திருப்பலியில் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் திருப்பலியில் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்   (AFP or licensors)

ரஷ்யாவில் அமைதி, உரையாடல் மற்றும் ஒற்றுமையின் சாட்சிகளாகத் திகழுங்கள்: பேராயர் காலகர்

ரஷ்யாவில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை அமைதி, உரையாடல் மற்றும் ஒற்றுமையின் சாட்சியாக விளங்க வேண்டும் என்று பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

இரஷ்யாவில் உள்ள கத்தோலிக்கத் திருஅவையை அமைதி, உரையாடல் மற்றும் ஒற்றுமையின் சாட்சியாக விளங்குமாறு பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலரான பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் வலியுறுத்தினார்.

மாஸ்கோவிற்கு மேற்கொண்ட பயணத்தின் நிறைவில், இவ்வாறு கூறிய பேராயர் காலகர் அவர்கள், அங்குள்ள அருள்பணியாளர்கள், துறவிகள், மற்றும் கத்தோலிக்க சமூகத்திற்கு திருத்தந்தை அவர்களின் அன்பான வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் ஆற்றி வரும் நம்பிக்கையூட்டும் மேய்ப்புப்பணி, கல்வி மற்றும் தொண்டு சேவைகளுக்காகவும், பிற கிறிஸ்தவ சமூகங்களுடன் தோழமையையும் உரையாடலையும் வளர்க்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்காகவும் பேராயர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் புனிதத்திற்கான அழைப்பைப் பற்றி எடுத்துக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வின் மூலம் நற்செய்தியை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள் என்றும், "தோழமையும் ஒற்றுமையும் எங்கு ஆட்சி செய்கிறதோ," "அங்கு சான்று வாழ்வு நம்பகமானதாகவும் பயனுள்ளதாகவும் மாறுகிறது" என்றும் வலியுறுத்தினார்.

பின்னர் பிற கிறிஸ்தவ சமூகங்கள், பிற சமயங்கள் மற்றும் கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுடனான உரையாடலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், உண்மையான உரையாடல் ஒவ்வொரு நபரின் அடையாளத்தையும் மதிக்கும் அதே வேளையில், மற்றவர்களிடம் காணப்படும் உண்மை மற்றும் கொடைகளுக்குத் திறந்த மனதுடன் செவிசாய்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.

திருஅவை அமைதியை உருவாக்குபவராகவும், பாலங்களை அமைப்பவராகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பேராயர் காலகர் அவர்கள், பிரிவு, வெறுப்பு மற்றும் தவறான புரிதல்களை நிராகரிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

மாஸ்கோவின் அமல உற்பவ மறைமாவட்டத் தலைமைக் கோவிலில் இடம்பெற்ற திருப்பலியின் போது, உரையாடல் மற்றும் அமைதியின் மூலம் பொது நலனுக்காக கத்தோலிக்கர்கள் இணைந்து பயணிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

"நம் அன்றாட வாழ்க்கையில் அமைதியை உருவாக்கும் உண்மையான கைவினைஞர்களாக மாற நற்செய்தி நம்மை அழைக்கிறது," என்று கூறிய அவர், பாலங்களைக் கட்டவும், காயங்களைக் குணப்படுத்தவும், துன்பப்படுபவர்களுக்கு எவ்வித சமயச் சார்புமின்றி சேவை செய்யவும் இறைமக்களை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஆகஸ்ட் 2026, 11:19