தேடுதல்

மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர். மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்.  (ANSA)

இரஷ்யா–உக்ரைன் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு திருப்பீடம் அழைப்பு!

மாஸ்கோவில் இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்த பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், இரஷ்யா–உக்ரைன் போரை இராணுவ நடவடிக்கைகளால் தீர்க்க முடியாது என்றும், நேர்மையான அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 25, செவ்வாயன்று, பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், மாஸ்கோவில் இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அவர்களைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, பன்னாட்டு விவகாரங்கள், இரஷ்யாவில் வாழும் கத்தோலிக்க சமூகத்தின் நிலைமை மற்றும் இரஷ்யா–உக்ரைன் இடையே அமைதிக்கான பாதையை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மனிதநேய முயற்சிகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது, திருப்பீடத்திற்கும் இரஷ்யாவிற்கும் இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அப்போது மோதல்களை இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என்பதை வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், பகையை முடிவுக்குக் கொண்டுவந்து நேர்மையான சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு திருத்தந்தை அவர்கள் விடுத்த அழைப்பை மீண்டும் நினைவுபடுத்தினார்.

அரசியல் மற்றும் தூதரக செயல்முறைக்குத் தேவையான சூழலை உருவாக்க கோரிக்கை விடுத்த அவர், மேலும் இரஷ்யாவும் உக்ரைனும் திறந்த மனப்பான்மையையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக பொதுமக்கள், உள்கட்டமைப்பு, காயமடைந்தவர்கள் மற்றும் போர்க் கைதிகள் தொடர்பான உலகளாவிய மற்றும் மனிதநேயச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

"இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும்" என்று வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளையும் பொதுமக்களின் துயரங்களையும் சுட்டிக்காட்டியதுடன் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்தவும், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், வெறுப்பு மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பை "மிகவும் பயனுள்ளது" என்று விவரித்த லாவ்ரோவ் அவர்கள்  வலுவான மனிதநேய ஒத்துழைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கும், மனிதநேய உதவிகளை வலுப்படுத்துவதற்கும், அமைதியைத் தேடுவதில் தனது ஆதரவை வழங்குவதற்கும் வத்திக்கான் உறுதியுடன் இருப்பதை பேராயர் காலகர் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் நல்லிணக்கத்தைப் பரப்புவதிலும் திருஅவைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் முக்கிய பங்கையும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஆகஸ்ட் 2026, 13:09