போதைப்பொருள் மற்றும் இளைஞர்களின் குற்றவியல் ஆட்சேர்ப்பைத் தடுக்க உரோமில் பன்னாட்டு கலந்துரையாடல்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 25 முதல் 27 வரை, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் இணைந்து, போதைப்பொருள் தடுப்பு, மறுவாழ்வு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களில் இளைஞர்கள் சேர்க்கப்படுவதைத் தடுப்பது குறித்து விவாதிக்க உரோமில் கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.
இலத்தீன் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஆன்மீக ஆதரவுப் பணி, இலத்தீன் அமெரிக்காவிற்கான திருத்தந்தை ஆணையம் மற்றும் அமெரிக்க நாடுகளின் போதைப்பொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டம், இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டும் சமூகத்தை மையமாகக் கொண்டும் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டத்தின் இறுதி முடிவுகள் திருத்தந்தை அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
போதைப்பழக்கத்திலிருந்து மீள்வது என்பது போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்துவதோடு முடிந்துவிடுவதில்லை என்பதை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு குடும்ப உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவது, நம்பிக்கை மற்றும் சுயமரியாதையை மீட்பது, வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைப்பது ஆகிய அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"எவரும் தனியாக மீட்கப்படுவதில்லை" என்பதே இந்த உரையாடலின் மையச் செய்தியாகும். பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களைப் பாதுகாக்க குடும்பங்கள், திருஅவை, அரசுகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்த உரையாடல் வலியுறுத்துகிறது.
போதைப்பழக்கப் பிரச்சனையை எதிர்கொள்ளவும், இளைஞர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் புரியும் குழுக்களின் கைகளில் விழுவதைத் தடுக்கவும் இறைநம்பிக்கை, அறிவியல், தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பிற்கு இக்கூட்டம் அழைப்பு விடுக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.