இனியது இயற்கை: நவீன விவசாய முறைகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியா, சீனா போன்ற கிழக்கத்திய நாடுகளில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வேளாண்மை இடம்பெற்று வருகிறது. இது, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் ஒரு முக்கிய அங்கமாக, இயற்கை முறையில் பயிரிடப்பட்டு வந்ததால் 18ஆம் நூற்றாண்டுவரை நம் மண்ணும் பயிரும் வளம் குன்றாமல் திகழ்ந்தன. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியர்கள் கடைப்பிடித்துவந்த பசுமைப் புரட்சி, வேளாண்மையில் வேதிய உரம், பூச்சிக்கொல்லி மருந்து, தனிப்பயிர் சாகுபடி போன்றவை அதிகமாகி, இறுதியில் நம மண்ணை உயிரற்றதாக ஆக்கிவிட்டன. பழைய பயிர் இரகங்கள் அதிகமாக அழிந்துவிட்டன. மேலும், மரங்கள் வெட்டப்படுவதால், பெய்யும் மழையும் குறைந்துவிட்டது. காலநிலை மாற்றத்தால் வெள்ளம் அல்லது வறட்சியும் உழவுத்தொழில் செய்வோரைப் பாதித்து வருகின்றன. இதனால் மழையை நம்பி பயிர்செய்யும் கிராம மக்கள் நகரப்புறம் நோக்கியோ அல்லது வெளிநாடுகளுக்கோ குடிபெயர்கின்றனர். தமிழகத்தில் விளைச்சல் நிலங்கள் பல, விலைபோகும் நிலங்களாகவும் மாறி வருகின்றன.
வீரிய விதைகள்
பசுமைப் புரட்சியின் காரணமாக, உற்பத்தியில் அதிக முன்னேற்றம் காணப்பட்டாலும், வீரிய விதைகளைப் பயன்படுத்தல், விவசாயத் தொழில்நுட்ப வளர்ச்சி, தொடர் பயிரிடல், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை, சுற்றுச்சூழலில் சீர்கேடுகளை ஏற்படுத்தியுள்ளன. உலகில் உண்ணக்கூடிய எண்பதாயிரம் தாவர வகைகள் இருக்கின்றன. இவற்றில் 150 வகைகள் மட்டுமே, அதிகமாகப் பயிர்செய்யப்படுகின்றன. நமது உணவுத் தேவையில் 90 விழுக்காடு, இருபதுக்கும் குறைவான தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதில் புல் இனத்தைச் சேர்ந்த கோதுமை, நெல், சோளம் போன்றவையே பெரும்பான்மையாகும். இந்தியாவில் ஒரு காலத்தில் முப்பதாயிரம் நெல் வகைகள் இருந்திருக்கின்றன. இத்தகைய நெல் கருக்களைப் பயன்படுத்தி, மாறுபட்ட நெல் கருக்களை இணைத்து உருவாக்கப்படுபவையே வீரிய வித்துக்கள் ஆகும்.(நன்றி : அ.பணி ச.மி.ஜான் கென்னடி சே.ச.)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்