தேடுதல்

செயின்ட் எலியாஸ் மலைத்தொடர் செயின்ட் எலியாஸ் மலைத்தொடர்   (WS)

இனியது இயற்கை: இப்பூமியில் கடற்கரையிலுள்ள மிக உயரமான மலைத்தொடர்

செயின்ட் எலியாஸ் மலைத்தொடர் இப்பூமியில், மிக செங்குத்தானதாக, 18 ஆயிரம் அடி உயரத்தில், பத்து மைல்கள் நீளத்தில் அமைந்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்துவரும் மலைத்தொடர்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான்

கானடாவில் லோகன், செயின்ட் எலியாஸ், லூக்கானியா, வுட், வான்கூவர், ஸ்லாகர், ஃபேர்வெதர், ஹூபார்ட் ஆகியவை மிக உயரமான மலைகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் லோகன் மலை, கடல்மட்டத்திற்கு மேலே 19,551 அடி (5959 மீ) உயரத்தைக் கொண்டு கானடாவில் மிக உயரமான மலையாகவும், வட அமெரிக்காவில் டெனாலி மலைக்கு அடுத்து மிக உயரமான மலையாகவும் உள்ளது. இம்மலையின் அடிவாரம், இப்பூமியில் எரிமலை இயல்பற்ற மலை அடிவாரங்களில் மிகப்பெரியதாகும். இம்மலையின் 11 சிகரங்கள் 16,400 அடிக்கும் அதிகமான அளவைக் கொண்டிருக்கின்றன. 

லோகன் மலைக்கு அடுத்து, கானடாவில் பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள மிக உயரமான மலை செயின்ட் எலியாஸ் மலைத்தொடராகும். இம்மலைத்தொடரில் கானடாவின் பத்து உயரமான சிகரங்கள் அனைத்தும் உள்ளன. இதுவே இப்பூமியில், கடற்கரையில் உள்ள மிக உயரமான மலைத்தொடராகும். இம்மலைத்தொடர் அலாஸ்காவின் தென்கிழக்கிலும், யுக்கோனின் தென்மேற்கிலும், பிரிட்டீஷ் கொலம்பியாவின் வடமேற்கிலும் அமைந்துள்ளது. அதனால் இம்மலைத்தொடரை, அமெரிக்க ஐக்கிய நாடும், கானடாவும் தங்களுடையவை என உரிமை கொண்டாடுகின்றன. இது, இவ்விரு நாடுகளிலும் உள்ள இரண்டாவது உயரமான மலையாகும். இம்மலைத்தொடரின் கானடாப் பகுதியில் Kluane தேசிய பூங்கா மற்றும்  அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பகுதியின் Wrangell ல்-செயின்ட் எலியாஸ் தேசிய பூங்காவும் உள்ளன. எலியாஸ் தேசிய பூங்காவின் 9,078,675 ஏக்கர் பகுதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகப்பெரிய ஒற்றை வனப்பகுதியாக குறிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் எலியாஸ் மலைத்தொடர் இப்பூமியில், மிக செங்குத்தானதாக, பனி வளைகுடாவில் கடல்மட்டத்திற்கு மேலே 18 ஆயிரம் அடி உயரத்தில் பத்து மைல்கள் அளவில் அமைந்துள்ளது. பூமியின் மேல் ஓடு நகர்வதால் உலகில் வேகமாக வளர்ந்துவரும் மலைத்தொடர்களில் ஒன்றாகவும் இது உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மூன்று முதல் நான்கு மில்லி மீட்டர் அளவுக்கு இம்மலைத்தொடர் உயர்ந்து வருகின்றது. இம்மலைத்தொடர் கண்கவர் பனிப்பாறைகளுக்கு பெயர் பெற்றவை. (நன்றி: விக்கிப்பீடியா)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2022, 15:23