தேடுதல்

சூடானிலிருந்து குழந்தைகளுடன் வெளியேறும் மக்கள் சூடானிலிருந்து குழந்தைகளுடன் வெளியேறும் மக்கள்  (ZOHRA BENSEMRA)

சூடானில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

உள்நாட்டுப் போர் காரணமாக கல்வி கற்பித்தலில் பெரும் நெருக்கடியை சந்தித்துவரும் சூடான் நாட்டில் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சூடான் நாட்டில் மனித மாண்புக்கு மதிப்பு வழங்கப்படாமையாலும், நலப்பணியாளர்கள் மீதான தாக்குதல்களாலும், அந்நாட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுள் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் இவ்வாண்டு இறுதிக்குள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.

சூடான் நாட்டில் இந்த அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்டக் காலத்தில் 3 இலட்சத்து 33,000 குழந்தைகள் பிறக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டிருக்க, அக்குழந்தைகளுக்கும் அவற்றின் தாய்மார்களுக்கும் பிறப்புகால நலஉதவிகள் குறைவுபடுவதால் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக யுனிசெப் என்னும் ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.

சூடான் நாட்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் போர் பகுதிகளில் சிக்குண்டவர்களாகவும், குடிபெயர்ந்தவர்களாகவும் வாழ்வதும், மருந்துக்களின் பற்றாக்குறையை எதிர்நோக்குவதும், நலஉதவியாளர்கள் மக்களை நெருங்குவது மிகவும் சிரமமாக இருப்பதும் எண்ணற்ற குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போதிய சத்துணவு இன்மையால் ஒவ்வொரு மாதமும் 55,000 குழந்தைகளுக்கு நல உதவிகள் தேவைப்படுவதாகக் கூறும் யுனிசெப் அமைப்பு, உள்நாட்டுப் போரால் அண்மைக் காலங்களில் இதுவரை 435 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

மேலும், சூடான் நாட்டில் மருத்துவர், தாதியர், ஆசிரியர்கள் மற்றும் சமூகப்பணியாளர்களுக்கு, பல மாதங்களாக ஊதியம் வழங்கப்பட்டவில்லை எனவும் யுனிசெப் தன் கவலையை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் காரணமாக கல்வி கற்பித்தலில் பெரும் நெருக்கடியை சந்தித்துவரும் சூடான் நாட்டில் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.

19 September 2023, 16:26