மியான்மாரில் இராணுவ வான்வழித் தாக்குதலில் 21 பேர் மரணம்!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
வடக்கு மியான்மாரில் உள்ள ஷான் மற்றும் மந்தாலே பகுதியில் நடந்த இராணுவ வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட ஏறக்குறைய 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 55 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு இராணுவப் படைகள் மீது மியான்மாரின் தேசிய விடுதலை இராணுவம் (TNLA ) குற்றம் சாட்டியுள்ளது.
ஜூலை 30 அன்று, கூட்காய் பகுதியிலுள்ள யார் சு தித் விடுதியின் மீது இராணுவ விமானம் குண்டுவீச்சு நடத்தியதில், அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில், இச்சம்பவத்தால் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய விடுதலை இராணுவம் (TNLA ) தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மியான்மாரின் இராணுவம் மறுத்துள்ளது.
ஜூலை 29 அன்று, மூன்று போர்விமானங்கள் ரூபி சுரங்கத்திற்குப் பெயர்பெற்ற மோகோக் நகரத்தை தாக்கியதில் பொதுமக்களில் 3 பேர் கொல்லப்பட்டு, ஒன்பது பேர் காயமடைந்தனர் என்றும், மேலும் அம்மாதத்தில் நடத்தப்பட்ட வலுவான குண்டுவீச்சுகளுக்கு பின்னர் நவுங்க்கியோ நகரத்தை இராணுவம் மீண்டும் கைப்பற்றியது என்றும் தெரிவித்துள்ளது.
இம்மோதல்களின் விளைவாக மக்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள இடம்பெயர்ந்துள்ளதாகவும், பள்ளிகள், கோயில்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பெருமளவில் சேதப்பட்டுள்ளதாகவும் உரைத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்