மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் 80,000 குழந்தைகளுக்கு காலரா அச்சுறுத்தல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மழைக்காலத்தால் மோசமடைந்து வரும் தொடர்ச்சியான தொற்றுநோய்கள் காரணமாக, 12 மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஏறத்தாழ 80,000 குழந்தைகள் காலரா தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
காங்கோ ஜனநாயகக் குடியரசும் நைஜீரியாவும் ஆயிரக்கணக்கான காலரா நோயாளிகளையும் நூற்றுக்கணக்கான இறப்புகளையும் பதிவு செய்துள்ளன என்றும், அவை இப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் நைஜீரியாவைத் தவிர, சாட், காங்கோ குடியரசு, கானா, ஐவரி கோஸ்ட் மற்றும் டோகோ போன்ற நாடுகள் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அதேவேளையில் நைஜர், லைபீரியா, பெனின், மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் கேமரூன் ஆகியவை பாதிக்கப்படக் கூடியவையாகவே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.
வெள்ளம், இடப்பெயர்வு, மோசமான நலவாழ்வு நடைமுறைகள் மற்றும் தூய்மையான நீர் மற்றும் நலவாழ்வுப் பராமரிப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் ஆகியவை பாதிக்கப்பட்ட நாடுகளில் காலரா நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்நிலையில் யுனிசெஃப் நிறுவனம் நலவாழ்வுக்கான உதவிகளைத் தீவிரமாக வழங்கி வருகிறது என்றும், தடுப்பூசி பரப்புரைகளை ஊக்குவிக்கிறது மற்றும் நோய்பரவுதலைக் கட்டுப்படுத்த அவசர தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும் உரைத்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு காலரா மீட்பு முயற்சிகளை வலுப்படுத்த, யுனிசெஃப் நிறுவனம் 166 கோடி ரூபாய் அளவிற்கு அவசர நிதியைக் கோரியுள்ளது.
மேலும் வேகமாகப் பரவி வரும் காலரா தொற்றுகள், ஆபத்தான அளவுக்கு அதிக இறப்பு விகிதங்களுடன், மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா முழுவதும் குழந்தைகளின் உயிருக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்