தேடுதல்

உணவின்மையால் துன்புறும் காசா மக்கள் உணவின்மையால் துன்புறும் காசா மக்கள்   (q)

காசா கடும் வறுமையை எதிர்கொள்வதாக ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கை!

காசாவில் இரண்டு மாதங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, இப்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 16.5 விழுக்காட்டினரைப் பாதித்துள்ளது : ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கை!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 3,20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் மிகக் கடுமையான துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது ஐநா அமைப்புகள்.

5,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் (ஏறக்குறைய 25 விழுக்காட்டினர்) வறுமையின் பிடியில் வாழ்கின்றனர் என்றும், 39 விழுக்காட்டு மக்கள் முழு நாட்களும் உணவு இல்லாமல் தவிக்கின்றனர் என்றும் தனது பெரும் கவலையையை வெளிப்படுத்தியுள்ளன.

வறுமைக்கான மூன்று வரம்புகளில் இரண்டு ஏற்கனவே எல்லையைத் தாண்டிவிட்டன என்றும், இது முழு அளவிலான வறுமையின் அவசர ஆபத்தைக்  குறிக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ள அவ்வமைப்புகள், அத்தியாவசிய சேவைகளின் சரிவு, இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடைசெய்யப்பட்டமை ஆகியவை நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜூலை மாதத்தில் மட்டும், முதல் இரண்டு வாரங்களில் 5,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்றனர் என்றும், இது அதிக எண்ணிக்கையிலான அளவாகும் என்றும் எடுத்துக்காட்டியுள்ள அவ்வமைப்புகள், ஊட்டச்சத்து சிகிச்சை சேவைகளில் 15 விழுக்காட்டிற்கும் குறைவானவை மட்டுமே செயல்படுகின்றன என்றும், இங்கு நிலவும் சூழல் எரிபொருள், சுத்தமான நீர் மற்றும் குழந்தைகளுக்கான தாய்ப் பால் பற்றாக்குறை நெருக்கடியை அதிகப்படுத்துகிறது என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளன.

எல்லைப் பாதைகள் ஓரளவு மீண்டும் திறக்கப்பட்டாலும், தற்போதைய உதவி விநியோகங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்குத் தேவையான 62,000 டன்களை விட மிகக் குறைவாகவே உள்ளன என்றும் அவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

இச்சூழலில் ஐக்கிய நாடுகள் அவையின் தலைவர்கள், பெருமளவிலான பட்டினியைத் தடுக்க, உடனடி, கட்டுப்பாடற்ற மனிதாபிமான உதவி மற்றும் வணிக உணவு இறக்குமதியை மீண்டும் தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜூலை 2025, 13:42