தேடுதல்

தாக்குதல்களால் இடம்பெயர்ந்து வரும் மக்கள் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து வரும் மக்கள்  

சூடான் தாக்குதலில் 35 குழந்தைகள் உட்பட 450-க்கும் மேற்பட்டோர் பலி!

வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் யுனிசெஃப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடானில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில், கடந்த வார இறுதியில், நாட்டின் வடக்கு கோர்டோஃபான் பகுதியில் பல சமூகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 35 குழந்தைகள் உட்பட 450-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று கவலை தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

மனித உரிமைகள் குழுவான அவசர வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, சூடானில் உள்ள ஒரு துணை இராணுவக் குழுவின் (RSF) போராளிகள், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது அந்நிறுவனம்.

சூடானின் நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) இயக்குனர் கேத்தரின் ரூஸ்ஸல் அவர்கள், ஜூலை 16, புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தத் தாக்குதல்களை "ஒரு சீற்றம்" என்று வர்ணித்துள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதல்கள் "வன்முறையின் பயங்கரமான அதிகரிப்பையும், மனித உயிர், அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனிதகுலத்தின் மிக அடிப்படையான கொள்கைகளை முற்றிலுமாக புறக்கணிப்பதையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன" என்றும் தனது உள்ளத்து உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார் ரூஸ்ஸல்.

குறிப்பாக, அண்மைய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் யுனிசெஃப் நிறுவனம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அதேவேளையில், "பொதுமக்கள், அதிலும் குறிப்பாக, தாக்குதல்களில் குழந்தைகள் ஒருபோதும் இலக்காகக் கொள்ளப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜூலை 2025, 14:29