தேடுதல்

நட்பை வெளிப்படுத்தும் கரங்கள் நட்பை வெளிப்படுத்தும் கரங்கள் 

வாரம் ஓர் அலசல் - உலக நண்பர்கள் தினம்

நமக்காக கவலைப்படும் நண்பர்கள் இருக்கும் வரை தினந்தோறும் நண்பர்கள் தினம் தான். எங்கோ பிறந்து இதயத்தில் இணைந்து வாழ்வில் பயணிக்கும் உன்னத உறவு நட்பு மட்டுமே! வாழ்வில் தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும், தடம் மாறும் போது தட்டி கேட்பவனும் தான் உண்மையான தோழன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒவ்வொரு உறவும் நாம் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் நட்பு மட்டுமே நம்மை தேர்ந்தெடுக்கும் ஒரே உறவு. காலப்போக்கில் இந்த உறவு நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் மாறும். 

அன்னை, தந்தை, சகோதரர்கள் என நம் உறவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான தினங்களை கொண்டாடுவோம். அதே போன்று நாமாகவே தேடிக்கொண்ட உறவுகளான நண்பர்களுக்கென்று தனி தினத்தையும் அனைத்துலக நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து வெற்றி தோல்விகளிலும், மகிழ்ச்சி துக்கம் என அனைத்து தருணங்களிலும் நம்முடன் இருந்து வாழ்வை அழகாக்குபவர்கள் நண்பர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடுவது தான் நண்பர்கள் தினம். வெவ்வேறு நாடுகள் வேறு வேறு தினங்களில் இந்நாளைக் கொண்டாடினாலும் பொதுவாக இது ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாள் நண்பர்களெனும் சிறப்பு உறவுகளை மதிப்பதற்கும் நிபந்தனையின்றி நம்முடன் எப்போதும் இருக்கும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நினைவூட்டலாகும்.

ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நம் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லக்கூடிய ஓர் உறவு தான் நட்பு. சரியா தவறா என்று பார்க்காமல் ஒவ்வொரு கஷ்டத்திலும் தோளோடு தோள் நிற்கும் உறவு அது. இந்த ஓர் உறவு தான் நம்மை எல்லா சிரமங்களில் இருந்து வெளியே இழுக்கிறது. எந்த சூழ்நிலையிலும், நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நண்பர்கள்தான். கடினமான காலங்களிலும் கூட அவர்கள் நமக்கு ஆதரவாக எப்போதும் இருப்பார்கள். வயது, நிறம், ஜாதிக்கு அப்பாற்பட்ட ஓர் உறவு எதுவென்றால், அது நட்பு தான். இந்த உலகில் இரத்த பந்தம் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே உறவு நண்பர்கள்தான்.நமக்காக கவலைப்படும் நண்பர்கள் இருக்கும் வரை தினந்தோறும் நண்பர்கள் தினம் தான்.

எங்கோ பிறந்து இதயத்தில் இணைந்து வாழ்வில் பயணிக்கும் உன்னத உறவு நட்பு மட்டுமே!வாழ்வில் தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும், தடம் மாறும் போது தட்டி கேட்பவனும் தான் உண்மையான தோழன். நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் நான் அழுதால் என் கண்ணீரிலும் எனக்காய் நிற்பவன் என் நண்பனே! இன்னும் அழுத்திச் சொல்லவேண்டுமானால், சாதனையில் இணைபவனை விட, சோதனையில் இணைபவனே உண்மையான நண்பன். நிபந்தனையற்ற அன்பை அடிப்படையாகக் கொண்ட நண்பர்கள் எப்போதும் நம்மை விட்டு விலகுவதில்லை. ஒவ்வொரு நாளுமே நட்புக்கான நாளாக இருந்தாலும், நண்பர்கள் தினம் இந்த ஆண்டு இந்தியாவில் ஆகஸ்ட் 3, அன்று கொண்டாடப்படுகிறது.

நட்புக்கு இலக்கணம்

பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது அங்கு வாழ்ந்த புலவரின் இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காணவேண்டும் என்னும் பேராவல் கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை. இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தார். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக்கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன் நட்புக் கொண்டவன். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக்கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.

இதை அறிந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் அமைச்சரிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் செய்யுங்கள் எனக் கூறினார். அதேபோல் பிசிராந்தையாருக்கும் ஓர் இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும் ஆந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தை மேற்கொண்டான்.

இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர் வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு. வடக்கிருத்தல் என்பது தன்நாட்டில் உள்ள ஆறு குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அதன் இடையே மணல் திட்டு ஒன்றை அமைத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல். தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான். இதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். சோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காகத் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார். பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன.

இதைப்போன்று இதிகாச காலத்து நட்புக்கு உதாரணம் என்றாலே கர்ணன் - துரியோதனன் என சொல்லும் அளவுக்கு இவர்கள் நட்பு காலம் கடந்தும் நிற்கிறது. பலபேர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் கர்ணனை, துரியோதனன் அரவணைத்துக் கொள்கிறான். அதனால் மட்டும் இந்த நட்பு கொண்டாடப்படவில்லை, அதையும் தாண்டி கர்ணன் மீது துரியோதனனுக்கு இருந்த நம்பிக்கையால்தான் இது காலம் கடந்து நிற்கும் நட்பானது.

துரியோதனன் மனைவி பானுமதியுடன் கர்ணன் தாயம் ஆடிக்கொண்டிருக்கிறான். பாதி ஆட்டத்தில் எழுந்து செல்லும் பானுமதியின் மடியில் கட்டியிருக்கும் முத்து மாலையை விளையாட்டு ஆர்வத்தில் கர்ணன், எங்கே ஓடுகிறாய் என இழுத்துவிடுகிறான். அப்போது அங்கு வரும் துரியோதனன், சிரித்தபடி உங்கள் விளையாட்டு தொடரட்டும் என்கிறான். கர்ணனனும் பானுமதியும் விலகி நிற்கின்றனர். விளையாட்டு ஆர்வத்தில் செய்வதறியாது மடியை இழுத்துவிட்டேன் என துரியோதனனிடம் உடல் நடுங்கி நிற்கிறான் கர்ணன். தங்கையின் மடியை இழுத்ததற்கு அண்ணன் ஏன் உடல் நடுங்கி நிற்க வேண்டும், உன்னையும், என் மனைவியையும் நன்கு அறியாதவனா நான் என துரியோதனன் கூறுவான். என் உயிரே என கர்ணன், துரியோதனனை கட்டியணைத்துக் கொள்கிறான். இது உண்மை நட்பின் அடையாளம்.

நட்பு நகுதற்கு மட்டுமல்ல

நம்முடைய நண்பர்கள், நம்முடைய பிரச்னைகளை தீர்க்க வேண்டியதில்லை, நம்முடன் இருந்தாலே போதும், அதுவே யானை பலம்தான். ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம், ஆனால் ஒரு சிறந்த நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம் என்பார்கள். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும் இருப்பவர் நண்பர் இல்லை, நம்முடைய துன்பத்திலும் இருப்பவரே நல்ல நண்பர். சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எதுவும் இல்லை, அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எதுவும் உண்டோ எனக் கேள்விக் கேட்பார் அறிஞர் ஒருவர். ஒருவரோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் இல்லை; நண்பரிடம் கூடாத செயல் இருக்கக் கண்டபோது , அதை கண்டித்துப் புத்தி சொல்வதற்கும்தான். இதைத்தான் வள்ளுவரும்,“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு” (குறள் 784) என்கிறார். சிரித்து மகிழ நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு, சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது தடுத்து நிறுத்திக் கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான்புகழ் கொண்ட வள்ளுவர். நம்மைச் சுற்றியும் எதிரிகள் இருந்தாலும், நம்முடன் ஒரு சிறந்த நண்பர் இருந்தாலே போதும், நம்மால் உலகையே வெல்ல முடியும்.  

இத்தினத்தின் வரலாறு

1930களில் அமெரிக்காவில் ஜாய்ஸ் ஹால் என்பவரால் நண்பர்கள் தினம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் 'ஹால்மார்க் கார்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவர் என்பதால், தனது நிறுவனத்தின் வாழ்த்து அட்டைகளை விற்கவே இதை முன்மொழிகிறார் என்ற பேச்சு எழுந்ததால், அங்கு நண்பர்கள் தினம் பிரபலமடையவில்லை. அதன் பிறகு,பரகுவாய் நாட்டில் 1958-ல் அனைத்துலக நண்பர்கள் தினம் முன்மொழியப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

இறுதியாக, ஐக்கிய நாடுகள் சபை 2011-ல் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்க ஜூலை 30ஐ அதிகாரப்பூர்வ அனைத்துலக நண்பர்கள் தினமாக அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 30-ஆம் தேதியை அனைத்துலக நண்பர்கள் தினமாக அறிவித்தாலும், உலக நாடுகள் பலவும் வெவ்வேறு தினங்களில் இதைக் கொண்டாடி வருகின்றன. இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா போன்ற நாடுகள் ஆகஸ்ட் முதல் வார ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடி வருகின்றன. அதே நேரத்தில், பின்லாந்து, எஸ்தோனியா, வெனிசுலா, ஈகுவடார் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்றே நண்பர்கள் தினத்தையும் கொண்டாடி வருகின்றன.மேலும், பாகிஸ்தானில் ஜூலை 19, அர்ஜென்டினா, பிரேசில், ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஜூலை 20, பொலிவியாவில் ஜூலை 23 மற்றும் நேபாளத்தில் ஜூலை 30 ஆகிய தேதிகளில் இது கொண்டாடப்படுகிறது.

எதற்காக இத்தினம்    

நாம் ஒவ்வொரு நாளும் நமது நட்பையும், நண்பர்களையும் கொண்டாட வேண்டும் என்றாலும், அனைத்துலக நட்பு தினம் என்பது, நம் வாழ்வில் நட்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது, ஏனெனில், நண்பர்கள் இல்லாமல் நம் வாழ்க்கை மகிழ்ச்சி அற்றது. நண்பர்களே நமது வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்குகிறார்கள். கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், நண்பர்கள் எப்போதும் நம் பக்கம் நிற்பதால், அவர்கள் நமது இரண்டாவது குடும்பம் போல் உள்ளார்கள். அத்தகையவர்களை ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். அனைத்துலக நட்பு நாள் என்பது, நமது நண்பர்களுடன் கழித்த அனைத்து நல்ல பழைய காலங்களை நினைவுகூர்ந்து புதிய நினைவுகளாக மீண்டும் மலரச் செய்யும் நாளாகும்.  உண்மையான நட்பு என்பது விலைமதிப்பற்ற விருது. இது இடத்தையும் நேரத்தையும் கடந்து, புரிதல்களின் மூலம், ஒன்றாக இணைக்கும் ஒரு பாலமாகும். நமக்கெதிராக செயல்படாமல், நம்மை எடைபோடாமல், நம்மை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள்தான் நம்முடைய சிறந்த நண்பர்கள். இந்த நாள், நண்பர்களுடன் நாம் வைத்திருக்கும் உறவு, அவர்களுடன் நாம் பகிர்ந்து கொண்ட நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்து,  நாம் எவ்வளவு அன்புக்கு உரியவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நம்முடைய நண்பர்களிடம் சிறிது கருத்து வேறுபாட்டால் இணக்கம் இல்லாமல் இருந்திருப்போம். அதை உடைத்து, நமது நட்பு பாலத்தை இணைக்கும் நாளாக இந்நாள் அமைகிறது. 

நம் அனைவரது வாழ்க்கையிலும் மதிப்புமிக்க விடயமாக இருப்பது நட்பு. நட்பு என்பது அன்பின் மற்றொரு சொல் என்றால் மிகையாகாது. இந்த அழகான உறவின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உண்மையான நட்பு புனிதமானது மற்றும் எந்த உறவாலும் அதை ஈடு செய்ய முடியாது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நண்பர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளைச் சிறப்பிக்கின்றோம்.

அனைத்துலக நண்பர்கள் தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் மிக நெகிழ்ச்சியூட்டும் ஒரு நிகழ்வு உள்ளது. அமெரிக்காவில், 1935 ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின் பின்னே சதி இருப்பதாகக் கூறப்பட்டது. இறந்தவரின் நண்பர் இந்த செய்தியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நண்பன் இழப்பை தாங்க முடியாமல் உயிரை விட்ட நட்பு மற்றும் பாசத்தை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

இத்தகைய உயரிய, உன்னத தினத்தை சிறப்பான முறையில் கொண்டாட நண்பர்களுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்வோம். பழைய நினைவுகளை அசைப்போட்டு புதிய பாதைக்கு ஆதாரமாக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜூலை 2025, 11:45