தேடுதல்

திருத்தந்தையுடன் உக்ரேனிய சிறார் (கோப்புப்படம் 3.7.25) திருத்தந்தையுடன் உக்ரேனிய சிறார் (கோப்புப்படம் 3.7.25)   (ANSA)

உக்ரைன் இளைஞர்களுக்கான கோடை விடுமுறை முகாம்

உக்ரேனிய குழந்தைகள் அவர்களது நண்பர்கள் ஜூலை 3 ஆம் நாள் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களைச் சந்தித்தனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது என்றும், நல்லிணக்க மனதுடன் ஒருவர் மற்றவருக்கு செவிசாய்க்கும்போதும், அமைதியைக் கண்டறியும்போதும் உள்ளுணர்வு உறுதியான எதார்த்தமாக மாறுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர் இத்தாலியில் கோடைவிடுமுறை முகாம்களில் பங்கேற்கும் உக்ரேனிய இளைஞர்கள்.

போரினால் உக்ரைன் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், போர் நடைபெறும் இடத்திலிருந்து வெகுதூரமாக, இத்தாலியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரேனிய பெண்கள் மற்றும் சிறுவர்களின் கோடை அனுபவம் குறித்து இவ்வாறு பகிர்ந்துள்ளனர் இளம் உக்ரைனியர்கள்.

மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடரும் அதே வேளையில், "ஒன்றாக இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது" என்ற கோடை வரவேற்பு திட்டம் 2025 -ஆனது இத்தாலி மற்றும் உக்ரைன் காரித்தாஸ், இத்தாலியில் உள்ள உக்ரைனின் திருப்பீடத் தூதரகம், உக்ரைனில் உள்ள அப்போஸ்தலிக்க தூதரகம், பல இத்தாலிய மறைமாவட்டங்கள், ACLI, உள்ளூர் தலத்திருஅவைகள் மற்றும் அமைப்புகளின் வளர்ந்து வரும் வலையமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

2022 -ஆம் ஆண்டு உருவாகிய இத்திட்டமானது, பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான சிறார்கள் இத்தாலிக்கு வந்து சேர உதவியுள்ளது, அவர்களுக்கு உதவிப்பொருள்கள், அமைதி மற்றும் பாதுகாப்பான வரவேற்பு சூழல்களில் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய சந்திப்புகளையும் வழங்கிவருகின்றது.

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை, பீட்மாண்டில் உள்ள ஃபார்மாஸா, கோமோ, கோமாச்சியோ, காஸ்தல் வொல்தர்னோ ஆகிய இடங்களில் உக்ரைனிய சிறார், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஓய்வு மற்றும் சமூகமயமாக்கலை ஊக்குவிக்கும் ஒரு மலை அனுபவச்சூழலையும் கோடைகால பயிற்சிகளையும் வழங்கிவருகின்றனர்.

உக்ரேனிய குழந்தைகள் அவர்களது நண்பர்கள் ஜூலை 3 ஆம் நாள் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களைச் சந்தித்தனர். உக்ரேனிய மக்களுடன் சேர்ந்து, காரித்தாஸ் இத்தாலியா பின்பற்றி வரும் ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியான இக்கோடை கால முகாமானது, விருந்தோம்பல் அதன் மிக உடனடி மற்றும் ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது, மேலும் வரலாற்றின் காயங்களுக்கு மத்தியில் பாலங்களை கட்டும் திறன் கொண்டதாகவும் திகழ்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஆகஸ்ட் 2025, 12:49