தேடுதல்

வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதி வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதி  (ANSA)

தீவிரமடையும் உக்ரைன், இரஷ்யா வான் வழித் தாக்குதல்கள்

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன், இரஷ்யா போர் 10 இலட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கான இடம்பெயர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஆகஸ்டு 1, வெள்ளிக்கிழமை இரவு முதல், சனிக்கிழமை காலை வரை இரஷ்ய எல்லையில் இடம்பெற்ற தொடர்ச்சியான 9 மணிநேர தாக்குதல்களில் இரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 112 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக இரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

உக்ரைன் தலைநகரில் இரஷ்யா நடத்திய  மிக மோசமான வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட ஏறக்குறைய  31 பேர் கொல்லப்பட்டதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், மத்திய இரஷ்யாவில் உள்ள ரியாசான் எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தில் உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.

இடம்பெற்றுவரும் இந்தத் தொடர்சியானத் தாக்குதல்களால் உக்ரேனியத் தலைநகரமான கீவ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்கள், 10 நாட்களுக்குள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமெனவும்,அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும்  இரஷ்யாவிற்கு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அணுஆயுத திறன் கொண்ட நீர் மூழ்கிக் கப்பல்களை முக்கிய பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் இரஷ்ய அரசுத் தலைவர் மெட்வடெவ், கூறியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை "போரை நோக்கிய அடையாளம்" என்றும், அமெரிக்கா - இரஷ்யா இடையிலான நேரடி மோதலைத் தூண்டக்கூடியது என்றும் கண்டித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும்  இந்தப் போர் 10 இலட்சத்திற்கும்  அதிகமான உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கான இடம்பெயர்வுகளையும்  ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஆகஸ்ட் 2025, 12:18