பாகுபாடுகளைச் சந்திக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினக் குழந்தைகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பாகிஸ்தானில் சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்த குழந்தைகள் பல நிலைகளில் பாகுபாட்டை அனுபவிக்கின்றனர் என்றும், அவர்கள் மதம், வறுமை, வயது, சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார் கத்தோலிக்கரும் NCRC இன் பணிக்குழுவின் உறுப்பினருமான நபிலா ஃபெரோஸ் பட்டி.
கட்டாய மதமாற்றங்கள், இளம் பருவ திருமணங்கள், கல்வி மறுப்பு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஓரங்கட்டல் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யுகான் செய்திகளுக்கு தெரிவித்துள்ள நபிலா அவர்கள், சிறுபான்மையினர் மக்கள்தொகையில் 3.72 விழுக்காடு மட்டுமே உள்ளனர் என்றும், அவர்களும் அவர்களது குழந்தைகளும் பெரும்பாலும் பாகுபாடுகளுக்கு ஆளாகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனக்குழுக்களைச் சேர்ந்த குழந்தைகள் முறையான சார்பு, சமூக விலக்கு மற்றும் நிறுவன புறக்கணிப்பு காரணமாக அதிக அளவிலான பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளது அரசின் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் (NCRC) அறிக்கை.
ஆகஸ்டு மாத்தின் முதல் வாரத்தில் "பாகிஸ்தானில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த குழந்தைகளின் சூழ்நிலை பகுப்பாய்வு" என்ற தலைப்பில் வெளியிடப்பட இவ்வறிக்கையானது கட்டாய மதமாற்றம், குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தைத் திருமணங்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனக் குழந்தைகள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2024- ஆம் ஆண்டு டிசம்பர் வரை, கடத்தல், கொலை, கட்டாய மதமாற்றம் மற்றும் இளம் வயதில் திருமணங்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனக்குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை தொடர்பான 27 புகார்களை ஆணையம் பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாபில் சிறுபான்மை இனக்குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகள் அதிக எண்ணிக்கையில் அதாவது 40 விழுக்காடு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் 547 கிறிஸ்தவர்கள், 32 இந்துக்கள், 2 அஹமதியாக்கள், 2 சீக்கியர்கள் மற்றும் 99 பேர் பிற மதத்தவராவர் என்று குறிப்பிடப்படுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்