நம் அனைவரையும் பாதிக்கும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் வாழும் நம் அனைவரையும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலையானது பாதிக்கின்றது என்றும், ஆசியாவில் ஏற்பட்டுள்ள பருவமழை வெள்ளத்தின் அளவு மற்றும் வேகம் மிகுந்த கவலை அளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார் சேவ் த சில்ரன் பன்னாட்டு ஆசிய இயக்குனர் அர்ஷத் மாலிக்.
வேகமாக மாறி வரும் நமது காலநிலையானது இதற்கு சிறிதும் காரணமாயிராத குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கின்றது என்றும், உலகளாவிய அநீதியான் இச்செயலையும் காலநிலை மாற்றாத்தினால் ஏற்படும் அழிவின் போக்கையும் மாற்ற இன்னும் நேரம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார் மாலிக்.
உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கிறது என்றும், இது கடந்த 10 ஆண்டுகள் பதிவில் இல்லாத அளவுக்கு வெப்பமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மாலிக்.
புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் மானியங்களை விரைவாக நிறுத்துவதன் வழியாக வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது, அதிக குழந்தைகள் தீவிர வெப்பநிலைக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ள மாலிக் அவர்கள், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் காலநிலை அதிர்ச்சிகளைச் சமாளிக்க உதவும் வகையில் நிதியுதவியை அதிகரிக்குமாறு அரசாங்கங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தையும் சேவ் தி சில்ட்ரன் கேட்டுக்கொள்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பருவமழையானது அதிகமாகப் பொழியப்பட்டு, ஆசியாவின் பல நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றது என்றும், பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தான வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார் மாலிக்.
கனமழையால் 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர், மேலும் பலர் பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள மாலிக் அவர்கள், சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து, லாவோஸ், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகள், வழக்கத்தை விட முன்னதாகவே பெய்த பருவமழை காரணமாக, ஓரளவுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பகிர்ந்துள்ளார்.
வெள்ளத்தால் வீடுகள் மற்றும் பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன, குடும்பங்கள் தங்குமிடம் இல்லாமல், குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் தவிக்கின்றனர் என்று எடுத்துரைத்துள்ள மாலிக் அவர்கள், எடுத்துக்காட்டாக பிலிப்பீன்ஸில், அண்மைய வாரங்களில் பல வெப்பமண்டல சூறாவளிகள் நாடு முழுவதும் ஏறக்குறைய 1,350 வகுப்பறைகளை முற்றிலுமாக அழித்துவிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்