தேடுதல்

காலரா தடுப்பு மருந்து பெறும் சூடான் குழந்தைகள் காலரா தடுப்பு மருந்து பெறும் சூடான் குழந்தைகள்  (AFP or licensors)

உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் காலரா நோய்ப்பரவல்

தவிலாவில், தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்கவும், மீட்பை ஆதரிக்கவும், யுனிசெஃப் 1கோடியே40 இலட்சத்திற்கும் அதிகமான வாய்வழி காலரா தடுப்பூசிகளை வழங்கத் தயாராகி வருகிறது

மெரினா ராஜ் - வத்திக்கான்

“தடுக்கக்கூடியதாகவும் எளிதில் சிகிச்சையளிக்கக்கூடியதாகவும் இருந்தபோதிலும், காலரா நோயானது தவிலா மற்றும் டார்பூரின் பிற பகுதிகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்றும், குழந்தைகளின் உயிருக்கு, குறிப்பாக இளைய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார் சூடானுக்கான யுனிசெஃப் பிரதிநிதி ஷெல்டன் யெட்.

ஆகஸ்ட் 4, திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள ஷெல்டன் யெட் அவர்கள், காலரா பரவலைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய யுனிசெஃப் பணியாளர்கள் அயராது உழைத்து வருவதாகவும், ஆனால் நடந்து வரும் வன்முறை அவர்களைச் சந்திக்க முடியாத அளவுக்கு வேகமாக தேவைகளை அதிகரித்து வருகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையை உடனடியாக மாற்றவும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளை மருந்து சிகிச்சைகள் சென்றடையவும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற அணுகலை வேண்டி தொடர்ந்து அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஷெல்டன்.

அனைத்து நிலைகளிலும் தொற்றுநோயை நிவர்த்தி செய்ய யுனிசெஃப் செயல்பட்டு வருகிறது என்றும், நலவாழ்வு, நீர், உணவு, பாதுகாப்பு, தூய்மை, சமூக ஈடுபாடு ஆகியவற்றில் உயிர்காக்கும் செயல்முறைகளை வழங்குகிறது என்றும் மொழிந்துள்ளார் செல்டன்.

தவிலாவில், தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்கவும், மீட்பை ஆதரிக்கவும், யுனிசெஃப் 1கோடியே40 இலட்சத்திற்கும் அதிகமான வாய்வழி காலரா தடுப்பூசிகளை வழங்கத் தயாராகி வருகிறது என்றும், மேலும் காலரா சிகிச்சை மையங்களை வலுப்படுத்த பங்காளர்களுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் ஷெல்டன்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வடக்கு டார்பூரில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காலராவைத் தவிர, ஐந்து வயதுக்குட்பட்ட 6,40,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையானது வன்முறை, நோய் மற்றும் பசியால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது என்றும், இலட்சக்கணக்கான மக்கள் மாநில தலைநகரான அல் ஃபாஷரிலிருந்து ஏறக்குறைய 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவிலாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தவிலாவிற்கு வருபவர்கள் தொடர்ந்து ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர், குறைந்த உணவு, போதுமான குடிநீர், குறைந்த தங்குமிடம் மற்றும் அதிகரித்து வரும் நோய் அச்சுறுத்தல் போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் ஷெல்டன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஆகஸ்ட் 2025, 12:23