தேடுதல்

தன் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கும் அன்னை தன் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கும் அன்னை  (AFP or licensors)

குழந்தைகளின் ஆரோக்கித்திற்கு தாய்ப்பால் இன்றியமையாதது

அனைத்து அமைப்புகளிலும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பால் நடைமுறைகளில் ஆதரவளிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை உலக தாய்ப்பால் வாரம் வலியுறுத்துகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு விழிப்புணர்வு அளித்தல், பாலூட்டும் அன்னையர்களுக்குப் போதுமான பராமரிப்பு மற்றும் ஆதரவு வழங்குதல், ஊக்குவித்தல் போன்றவை தங்களின் மேலான கடமை என்று எடுத்துரைத்துள்ளார் யுனிசெஃப் இத்தாலிய தலைவர் நிக்கோலா கிராசியானோ.

ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் சிறப்பிக்கப்படும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு உலகெங்கிலும் இருக்கும் பாலூட்டும் அன்னையர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ள நிக்கோலா கிராசியானோ அவர்கள், உலகளவில் குழந்தைகளின் உயிர்வாழ்வு, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது என்பதை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கியமான தருணமாக இந்த உலக தாய்ப்பால் வாரம் அமைகின்றது என்றும், இந்த ஆண்டின் கருப்பொருள், "தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளித்தல்: நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குதல்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனைத்து அமைப்புகளிலும் அன்னையர்கள், தாய்ப்பால் நடைமுறைகளில் ஆதரவளிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை உலக தாய்ப்பால் வாரம் வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ள கிரசியானோ அவர்கள், உலகளவில், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 48 விழுக்காட்டினர் 2024- ஆம் ஆண்டில் தாய்ப்பால் கொடுக்கப்பட்டனர், இது 2030 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார சபையால் நிர்ணயிக்கப்பட்ட 60 விழுக்காடு இலக்கை விட 12 விழுக்காடு குறைவு என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பிறந்த முதல் 23 மாதங்கள் வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் உகந்த முறையில் தாய்ப்பால் கொடுக்கப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6,00,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தியுள்ள கிராசியானோ அவர்கள், தாய்ப்பாலூட்டலை உலகளாவிய அளவில் விரிவுபடுத்துவது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வருடாந்திர இறப்புகளில் 16 விழுக்காட்டினைத் தடுக்கலாம் என்றும் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஆகஸ்ட் 2025, 11:14