தேடுதல்

காசா குழந்தைகள் காசா குழந்தைகள்   (AFP or licensors)

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள காசா குழந்தைகள்

மக்கள் அதிகமாக வாழும் காசா நகரத்தில் வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்துகிறது

மெரினா ராஜ் - வத்திக்கான்

அதிகரிக்கப்பட்ட இராணுவத் தாக்குதல்களால் காசா நகரில் 450,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் யுனிசெஃப் இயக்குனர் எட்வார்ட் பெய்க்பெடர்.

செப்டம்பர் 12, வெள்ளியன்று காசாவில் நிலவும் சூழல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவிற்கான யுனிசெஃப் மண்டல இயக்குனர் எட்வார்ட் பெய்க்பெடர்.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வரும் 2,400 குழந்தைகளில் சிலர் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளது என்று எடுத்துரைத்த எட்வர்டு அவர்கள், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகால இடைவிடாத போரால் மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து சோர்வடைந்துள்ளனர் என்றும், பஞ்சமும் முழுமையான அழிவும் பரவி வருவதால், அவர்கள் உயிர்வாழும் விளிம்பில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மக்கள் அதிகமாக வாழும் காசா நகரத்தில் வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்துகிறது என்றும், குழந்தைகள் உட்பட பொதுமக்களைக் கொல்வதும், ஊனப்படுத்துவதும், வீடுகள், பள்ளிகள் மற்றும் முக்கிய நீர் அமைப்புகளை அழிப்பதும் நகரத்தை திறம்பட வாழத் தகுதியற்றதாக மாற்றும் அபாயத்தினை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார் எட்வர்டு.

குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும், இஸ்ரேல் அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், இன்னும் பெரிய பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க உடனடியாக செயல்பட உலகத் தலைவர்களை யுனிசெஃப் வலியுறுத்துகிறது என்றும் கூறினார் எட்வர்டு. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 செப்டம்பர் 2025, 16:18