தேடுதல்

உலக அமைதி நாள் உலக அமைதி நாள்  

வாரம் ஓர் அலசல் – உலக அமைதி நாள்

1981ம் ஆண்டு ஐ.நா.பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட உலக அமைதி நாளானது 1982ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், மூன்றாவது செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 லிருந்து ஆண்டுதோறும் இவ்வுலக நாள் செப்டம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சில இடத்தில் சத்தம் பதிலாக இருந்தாலும் சில இடங்களில் அமைதி அருமையான பதிலாக இருக்கும் என்பது கவிஞர்களின் கருத்து. சில நாள் தேய்ந்து சுருங்கிக் காத்திருந்து, வரும் நாள்களில் வளர்ந்து மின்னொளி தரும் நிலவைப் போலவும், ஒரு நாள் உதிர்ந்து மறுநாள் மலர்ந்து மணம் பரப்பி மகிழ்வளிக்கு மலரைப்போலவும் என்றும் எதிலும் அமைதி கொள்ள வேண்டும் என்று நமது வாழ்க்கை நியதிகள் நமக்கு வலியுறுத்துகின்றன. சாதாரண மனிதனாக இருந்தாலும், சகல செல்வங்களுக்கும் அதிபதியாக இருந்தாலும் எல்லாரும் விரும்புவது  மன அமைதியை மட்டுமே. மன அமைதி நிலவ நம்முடைய சுற்றுச்சூழல் அமைதியாக இருக்க வேண்டும். ஆத்திரம் ஊட்டும் செயல்கள் பல நம்மை சூழ்ந்து கொண்டாலும், அநியாயங்களால் நாம் தாக்கப்பட்டாலும், அதர்மம்  நம்மேல் ஆதிக்கம் செலுத்தினாலும் எதிலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் சினம் காட்டாமல் அமைதி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் அனுபவம் வாய்ந்த ஆன்றோர் பலர். ஆக நம்மிலும் நம்மைச் சுற்றிலும் அமைதியை நாம் அனுபவிக்க வேண்டும். அமைதியான முறையில் இவ்வுலக மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் அனைத்துலக அமைதி நாளானது கொண்டாடப்படுகின்றது. அமைதியான உலகத்திற்காக இன்றே செயல்படுங்கள் என்பதே 2025ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   

கொந்தளிப்பு, குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த ஒரு காலகட்டத்தில், அமைதிக்காக அணிதிரள்வதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பது நம் அனைவரும் மிக முக்கியமான ஒன்று என்பதை இந்த அனைத்துலக அமைதி நாளானது எடுத்துரைக்கின்றது. போர், வன்முறை மற்றும் மோதல்களின் முன்னணியில் இருக்கும் நபர் முதல் நாட்டில் உலகில் சமுதாயத்தில் அமைதி  நிலவ அதனைக் காக்கும் படையினர் முதல் ஒவ்வொரு சமூக உறுப்பினர்களும் உலகெங்கிலும் உள்ள வகுப்பறைகளில் இருக்கும் மாணவர்கள் வரை, அனைவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை இந்த நாள் நமக்கு வலியுறுத்துகின்றது.  இந்த அனைத்துலக அமைதி நாளில் வன்முறை, வெறுப்பு, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்; மரியாதை காட்ட வேண்டும்; நமது உலகின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்நாள் நமக்கு வலியுறுத்துகின்றது. இதனைச் செயல்படுத்த பல வழிகள் உள்ளன. புரிதல், அகிம்சை, ஆயுதக் குறைப்பு ஆகியவற்றின் அவசரத் தேவை பற்றிய உரையாடல்களைத் தூண்டவும் நாம் அழைக்கப்படுகின்றோம். அமைதியுள்ள சமூகமாக நாம் வாழ்கின்ற இவ்வுலகம் திகழ சமூகத்தில் தன்னார்வத் தொண்டுகள் பல செய்வோம். நமது சொந்தக் குரல்களிலிருந்து வேறுபட்ட குரல்களுக்கு செவிசாய்ப்போம். பணியிடத்தில் ஏற்படும் பாகுபாடுகளைக் களைய முயல்வோம். இணையதளத்திலும் சமூகத்திலும் மனித மாண்பிற்கு எதிராக ஏற்படும் கொடுமைகளைக் களைய முன்வருவோம். நமக்கு பிடித்தமானவற்றை எல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அச்செய்தியின் தரம் அறியாமல், நன்மை தீமை உணராமல் வலைதளங்களில் பதிவிடுவதற்கு முன்பு உண்மைகளைச் சரிபார்க்க நேரம் ஒதுக்குங்கள் என்று வலியுறுத்துகின்றார் ஐக்கிய நாடுகள் அவையின் செயலர் அந்தோணியோ கூட்டரஸ். நாம் அறியாமல் பகிரும் செய்திகளே பல நேரங்களில் அமைதியற்ற சூழலுக்குக் காரணங்களாக அமைகின்றன.

2025 ஆம் ஆண்டில் தனது இருபதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அமைதிக் கட்டமைப்பு ஆணையத்தின் வழியாக, ஐக்கிய நாடுகள் அவையானது வறுமை, சமத்துவமின்மை, பாகுபாடு, அநீதி - வன்முறையின் அனைத்து சாத்தியமான இயக்கிகளையும் நிவர்த்தி செய்ய செயல்படுகிறது. அதன் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் வழியாக, ஐக்கிய நாடுகள் சபை செழிப்பை அதிகரிக்க, நலவாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, மற்றும் அனைத்து வகையான பாகுபாடு மற்றும் அநீதியையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நாடுகளின் முயற்சிகளை ஆதரிக்கிறது. உலகெங்கிலும் உள்ள கடினமான மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் பணியாற்றுகிறார்கள், இது நம் அனைவரையும் நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கிறது என்றும் கூட்டரஸ் அவர்கள் இந்த அனைத்துலக நாளை முன்னிட்டு தனது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.

நாடுகளின் மக்கள் தங்களது சனநாயக உரிமைகளுக்காகவும் நாட்டில் அமைதி ஏற்படவும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் நிறுவனமும் செப்டம்பர் 21 ஐ உலக அமைதி நாளாகக் கடைபிடித்து வருகிறது. 1981ம் ஆண்டு ஐ.நா.பொது அவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், 1982ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், மூன்றாவது செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 லிருந்து ஆண்டுதோறும் இவ்வுலக நாள் செப்டம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் அமைதிக்காக உழைத்து உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அதேசமயம் அமைதி குறித்த விழிப்புணர்வின் தேவையும் இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது.

அந்தப் பாட்டி கம்பளி நூலால் பின்னல் வேலைகள் செய்வதில் மிகவும் திறமை பெற்றவர். பாட்டி அதற்காக, கம்பளி நூலையும் ஒரு பின்னல் ஊசியையும் எப்போதும் வைத்திருந்தார். ஒரு நாள் அந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்தார். ஆனால் அங்கே யாருமே இல்லை. வெகு நேரம் சுற்றியலைந்ததால் அவருக்குக் கால் வலித்தது. எனவே ஓரிடத்தில் அமர்ந்தார். காலுக்கு ஒரு ஜோடி செருப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. உடனே தன்னிடமிருந்த கம்பளி நூலால் பின்னி அழகான ஒரு ஜோடி செருப்பை உருவாக்கினார். பின்னர் அழகான பாய், கட்டில், அழகான வீடு, வீட்டில் கொஞ்சி விளையாடக் குழந்தைகள், குழந்தைகளுக்கு ஊஞ்சல்கள் என ஒவ்வொன்றாக கம்பளி நூலால் உருவாக்கினார். பின்னர் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குச் சென்றார். இந்த நூல் குழந்தைகளை யாராவது பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்வார்களா? என்று ஆசிரியர்கள் கேவலமாகச் சொன்னதும், பாட்டிக்கு படு கோபம் வந்தது. உடனே பாட்டி ஊசியையும் நூலையும் எடுத்து சட்டென்று பின்னி, ஓர் அழகான கார் செய்தார். தன் பேரக் குழந்தைகளை அதில் ஏற்றிக்கொண்டு நியாயம் கேட்பதற்காக நகரத் தலைவரிடம் சென்றார். பாட்டி அளித்த புகாரின் பேரில் நகரசபை கூடி விவாதித்தது. "நம் நகரம் மிகவும் புகழ் பெற்ற நகரம். எனவே இந்த நகரத்துப் பள்ளியில் கம்பளி நூலால் செய்யப்பட்ட குழந்தைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது'' என்று தலைவர் இறுதியாகத் தீர்ப்புச் சொன்னார். பாட்டிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. அடுத்த நிமிடமே ஊசி நூலெடுத்துப் பின்னி ஒரு விமானம் செய்தார். அந்த விமானத்தில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அந்த நாட்டு அரசுத் தலைவரிடம் முறையிடப் பறந்து சென்றார். ஊசி நூலால் பின்னி உருவாக்கப்பட்ட கம்பளிக் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கக் கூடாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை'' என்ற பதில் அங்கிருந்தும் வந்தது. ஆனால் அரசு அதிகாரிகளோ, பாட்டியின் கைவேலைப்பாடுகளை வைத்து கண்காட்சி நடத்திப் பணம் திரட்டத் துரிதமாய்த் திட்டமிட்டார்கள். இதனால் கோபமடைந்த பாட்டியோ, "என் பேரக் குழந்தைகள் படிப்பதற்கு இடம் தராதவர்கள், இப்போது எங்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்களே' என்று தன் வீட்டின் ஒரு நூலைப் பிடித்து இழுத்தார். உடனே வீடு நூல் நூலாகப் பிரிந்து தரைமட்டமாகியது. இதேபோல் தான் உருவாக்கிய மரம் செடி கொடிகள், பேரக் குழந்தைகள், புத்தகங்கள் என அருமையான அனைத்துக் கம்பளிப் பொருட்களையும் பிரித்து அழித்தார்.

பிறகு பாட்டி, இரக்கமுள்ள நல்லவர்கள் வாழும் ஒரு நாட்டைத் தேடிப் புறப்பட்டார். அப்படிப்பட்ட ஒரு நாட்டை அவர்கள் விரைவிலேயே கண்டுபிடிப்பார். அங்கே மறுபடியும் தன் ஊசியில் நூல் கோர்த்து அழகும் அறிவுமுள்ள தன் பேரக் குழந்தைகளை மீண்டும் உருவாக்குவார். அனைவரும் அவரை அன்பு செய்வார். அப்போது பாட்டி பழைய கோபமெல்லாவற்றையும் மறந்து புன்னகைப்பார். பிறகு அவர் எந்தக் கவலையுமின்றி மீண்டும் மீண்டும் பின்னி, அதிசயங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்.

அன்பர்களே, இது ஒரு ஹீப்ரு மொழிக் கதை. இந்தப் பாட்டி போன்று ஒவ்வொரு குடிமகனும் எந்தக் கவலையுமின்றி வாழும் ஒரு சனநாயகத்தில்தான் அமைதி இருக்கும். “இறுக்கி பிணைக்கப்பட்ட கைகளைக் கொண்டு அடுத்தவர் கையைக் குலுக்க முடியாது” என்றார் மகாத்மா காந்தி. “நாம் ஒருவர் ஒருவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை மறப்பதாலே அமைதி ஏற்படுவதில்லை” என்றார் புனித அன்னை தெரேசா. “அமைதி வேண்டுமா, அதை உன் நண்பர்களிடம் பேசாதே, ஆனால் உன் எதிரிகளிடம் அதைப்பற்றிப்பேசு” என்றார் Moshe Dayan. Seymour Miller மற்றும் Jill Jackson சொன்னது போல, வீட்டிலும் நாட்டிலும் அமைதியை விரும்பும் நாம் ஒவ்வொருவரும் அந்த அமைதியை முதலில் நம்மிலிருந்து தொடங்குவோம். அமைதியில் வாழும் இதயமே பிறரையும் அமைதியில் வாழ விடும். தன் இதயத்தில் அமைதியை அனுபவிக்கும் இதயமே, பிறரும் அந்த அமைதியை அனுபவிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடையும். ஒரு மாற்றம் கண்டிட உழைத்திடுவோம். நம் பழக்கத்தில் அமைதியை புகுத்திடுவோம். மன அமைதியில் உலகை வென்றிடுவோம். எங்கும் எதிலும் உன் உழைப்பால் மன அமைதியால் வெற்றி கொள்வோம். வெற்றி பெற்ற பின்னரும் அமைதி கொள்வோம். அமைதி நிறைந்த உலகத்திற்காக இன்றே செயல்படுவோம். அனைவருக்கும் இனிய உலக அமைதி நாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 செப்டம்பர் 2025, 14:48