வாரம் ஓர் அலசல் – உலக சுற்றுலா தினம் – செப்டம்பர் 27
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆண்டு முழுவதும் கடினப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த பொருள்களைக் கொண்டு புத்தம் புது இடங்களைப் பார்க்க ஆசை கொண்டு அவற்றைச் சுற்றி உலா வருவதாலே சுற்றுலா என்று பெயர் பெறுகின்றது. சுற்றுலா என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் அது அருகில் இருக்கும் இடமானாலும் சரி, அயல்நாட்டில் இருக்கும் இடமானாலும் சரி. எது எல்லாருக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. நாம் இருக்கும் இடத்தில் இருந்து அகன்று வேறு ஓர் இடத்திற்குத் தனியாகவோ அல்லது போக்குவரத்து வாகன உதவியுடனோ செல்வது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. உள்ளூர் அதிசயம் முதல் உலக அதிசயம் வரை சிறப்பான இடங்கள் எதுவென்று அறியும் ஆவலும் அவ்விடத்திற்குச் சென்று வரவேண்டும் என்ற எண்ணமும் நம் எல்லார் மனதிலும் இருக்கும். பயணம் செய்வது மனிதனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாடோடிகளாக வாழ்ந்த மனிதர்கள் தானே, சமூக கலாச்சார மாற்றத்தின் காரணமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். ஆக பயணம் எல்லார் வாழ்விலும் முக்கியமான இடத்தினைப் பிடித்த ஒன்று. இத்தகைய பயணமாகிய சுற்றுலாவை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக சுற்றுலாவானது செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
வழக்கமான இடத்தை விட்டு வேறு ஓர் இடத்துக்கு ஓய்வு அல்லது மற்ற ஏனைய நோக்கங்களுக்காக சென்று தங்கி வருவது சுற்றுலா என்று உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கம் கூறுகிறது. சுற்றுலாவின் முக்கியத்தும் மற்றும் சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் அடங்கியுள்ளது என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. சுற்றுலா வழியாக மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐக்கியா நாடுகள் சபை அங்கீகரித்து அறிவித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல வகைகளாக சுற்றுலாப் பிரிந்து வளர்ந்து வருகின்றது.
சுற்றுலா வழியாக பொருளாதார வளர்ச்சி, பன்னாட்டுப் புரிந்துணர்வு, நாடுகளுக்கிடையே அமைதி ஆகியவற்றை மேம்படுத்துதலும் மனித குலம் முழுவதும் அடிப்படைச் சுதந்திரத்தை அடைவது குறித்த அறிவுகளை பெறுவதும் தான், சுற்றுலா தினத்தின் முக்கிய மேற்கோளாகக் கருதப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய துறையாகவும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழிலாகவும் விளங்குவது சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்கும் சுற்றுலா துறையானது வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் மிக்க சக்தியாக விளங்குகின்றது.
“சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்” என்ற கருப்பொருளில் 2025-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுலா தினம் சிறப்பிக்கப்படுகின்றது. நேர்மறையான மாற்றத்தின் முகவராக சுற்றுலாவின் மாற்றத்தக்க ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இந்த ஆற்றலை உணர்ந்துகொள்வது வளர்ச்சியை விட அதிகமாக தேவைப்படுகிறது. இதற்கு நல்ல நிர்வாகம், அடிப்படை திட்டமிடல், வலுவான கண்காணிப்பு மற்றும் நீண்டகால நிலைத்தன்மை இலக்குகளுடன் ஒத்துப்போகும் தெளிவான முன்னுரிமை அமைப்பு தேவை. சுற்றுலா என்பது பொருளாதாரத் துறையை விட அதிகமான சிறப்பு பெற்றதாக, சமூக முன்னேற்றத்திற்கு ஓர் ஊக்கியாக உள்ளது, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒரு திட்டமிட்ட மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் கொண்டு நன்மைகளைத் தன்னகத்தேக் கொண்டுள்ள சுற்ற்லாவானது, சுற்றுலா மேம்பாடு மற்றும் முடிவெடுப்பதில் நிலைத்தன்மை, மீள்தன்மை மற்றும் சமூக சமத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.
சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்த விழிப்புணர்வை பன்னாட்டு சமூகத்தினரிடையே வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யும் தரமான சுற்றுலா பயிற்சி வழியாக, நிலையான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் வழியாக, பசுமை மாற்றத்தை துரிதப்படுத்துவதன் வழியாக, புதுமை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதன் வழியாக, சுற்றுலாவின் பணியாளர்களை மேம்படுத்தக்கூடிய தொழில்முனைவோர் வழியாக சுற்றுலா தினத்திற்கு நாம் பங்களிக்க முடியும்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 முதல் 29 வரை மலாக்காவில் உலக சுற்றுலா தினமானது ஐக்கிய நாடுகளின் அவையால் சிறப்பிக்கப்படுகின்றது. இதில் உலக சுற்றுலா தினம் (WTD) மற்றும் 7வது உலக சுற்றுலா மாநாடு (WTC) 2025, ஐ.நா. சுற்றுலா உறுப்பு நாடுகள், ஐ.நா. சுற்றுலா இணை உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுற்றுலாத் துறையின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
உலகிலேயே சிறந்த 3 சுற்றுலா தளங்கள் உள்ளன. 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்கள் குறித்த அறிக்கையை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டது. அதில் கிரீஸ்(Greece), மொரிஸ்(Mauritius) மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக குறிப்பிடப்டப்பட்டுள்ளன. தொடர்ந்து, இலங்கையில் (srilanka) இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளன. கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலைமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை 2024ஆம் ஆண்டில் சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளது.
டிராவல் + லெஷர் இதழில் தரவரிசைப்படுத்தப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் ஓய்வு நேர கணக்கெடுப்பின் முதல் 25 நகரங்களின் பட்டியலில், உலகின் பல்வேறு நகரங்கள் அவற்றின் அழகு, கலாச்சாரம், கேளிக்கை, இடங்கள், விடுதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஜெய்ப்பூர் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜெய்ப்பூரைத் தவிர, இந்தியாவின் மேலும் 2 நகரங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
தரவரிசையில் நான்கு நகரங்களுடன் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. இதில் சான் மிகுவல் டி அலெண்டே இரண்டாவது ஆண்டாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மெக்சிகன் நகரம் அதன் காலனித்துவமான வசீகரம், மலிவு விலை, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் துடிப்பான கலைக் காட்சி ஆகியவற்றிற்காகப் பாராட்டப்படுகிறது. தாய்லாந்து முதல் 10 இடங்களில் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. அதில், சியாங் மாய் 2வது இடத்திலும், தலைநகர் பாங்காக் 4வது இடத்திலும், அதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ 3வது இடத்திலும் மற்றும் கியோட்டோ 8வது இடத்திலும் உள்ளன.
மேலும், தொல்பொருள் அற்புதங்களுக்குப் பெயர் பெற்ற, பண்டைய வரலாறுகளைக் கொண்ட நகரங்களான குஸ்கோவின் பெரு நகரம் 10வது இடத்திலும், ரோமின் இத்தாலி நகரம் 18வது இடத்திலும், மெக்சிகோவின் மெரிடா நகரம் 25வது இடத்திலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ஆக்ரா ஆகிய மூன்று இந்திய நகரங்கள் உலகளவில் முதல் 25 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
ஆண்டு முழுவதும் உழைக்கிறோம், உழைத்ததின் பலனைக் குடும்பத்தோடு கொண்டாடுவோம். சுற்றுலா சென்று ஆனந்தம் கொள்வோம். இல்லத்தில் இருப்பவர்களின் முகத்தில் இன்பம், குழந்தைகள் முகத்தில் குதூகலம், பெரியோர்கள் முகத்தில் பரவசம். ஆம் சுற்றுலா அனைவருக்கும் ஆனந்தம் தரும். பார்த்து வந்த இடங்களை பட்டியல் போட்டு அசை போட்டுக்கொண்டே அடுத்தடுத்த தினங்கலெல்லாம் அழகாய் செல்லும் மகிழ்ச்சியைக் காண்போம். கஷ்டம் துன்பம் கவலை மறந்து சுற்றி பறக்கும் பறவை போல சுற்றுலா சென்று நாமும் சுகமாய் வருவோம்..
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்