இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 100 பாலஸ்தீனியர்கள் மரணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் வத்திக்கான்
இச்செவ்வாய்க்கிழமை பிற்பகுதியிலிருந்து புதன்கிழமை வரை காசா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் இது அக்டோபர் 10-ஆம் தேதி போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்குமிடங்களை குறிவைத்தன என்றும், இரஃபாவில் நிகழ்ந்த தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலிய ரிசர்வ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக "பயங்கரவாத இலக்குகளை" தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஹமாஸ் மீது குற்றம் சாட்டியுள்ள அதேவேளையில், ஹமாஸ் இந்தக் கொலையில் ஈடுபடவில்லை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தனித்தனியாக, "சட்டவிரோத போராளிகள்" என்று வகைப்படுத்தப்பட்ட பாலஸ்தீனிய கைதிகளைப் பார்வையிட அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ICRC) இஸ்ரேல் தடை விதித்ததுடன், இதுபோன்ற வருகைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறியதையும் அச்செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அக்டோபர் மாதம் வரை, இந்தச் சட்டத்தின் கீழ் 2,673 பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று உரிமைகள் குழுவான ஹாமோகெட் மேற்கோள் காட்டிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்