வாரம் ஓர் அலசல் – பன்னாட்டு பெண் குழந்தைகள் தினம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒரு மனிதன் தான் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லுபவள், வாழ்கின்ற வாழ்க்கையையே அர்த்தமாக்குபவள், வசந்தத்தை நமக்குள்ளே வரவழைப்பவள் பெண் குழந்தை. பிறக்கும் குழந்தை முதல் குழந்தையாக இருந்தால், அவ்வீடு இறை ஆற்றலால் நிறைந்து இருக்கும் என்பர் மூத்தோர். பெண் குழந்தை இல்லாத வீடு ஓர் பொட்டல் காடு. பருவத்தில் மழை பொழிந்தால் சிறு இலை தலைகளை காணலாம். ஆனால் பெண் குழந்தை இருக்கும் வீடோ, பசுமை நிறைந்த நந்தவனம். இப்படியாக பெண்குழந்தைகளின் சிறப்பு பற்றி நாம் அதிகமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
பூக்கள் சிரிக்கும் பூங்காவனமாக, சோம்பேறியான மனிதனைக்கூட உழைக்கவைக்கும் எந்திரமாக, சோர்வடைந்து மனம் தளர்ந்தால் புத்துணர்வு தருபவர்களாக பெண்குழந்தைகள் இருக்கின்றனர். தாய்க்கும் தந்தைக்கும் அன்பின் இணைப்பாக, தாயோடும் தந்தையோடும் மிகுந்த அன்பினை வெளிப்படுத்துபவர்களாக பெண்குழந்தைகள் சிறந்துவிளங்குகின்றனர். முரட்டுத்தனமான மனிதைக்கூட மென்மையாக மாற்றி, முள்ளையும் மலர வைக்கின்றனர் பெண் குழந்தைகள். அவர்கள் இருக்கும் வீடு ஓர் சிறு கோவில் போல காட்சியளிக்கும். இத்தகைய பெண்குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11 அன்று பன்னாட்டுக் குழந்தைகள் நாளானது சிறப்பிக்கப்படுகின்றது.
அக்டோபர் 11: பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்
பெண் குழந்தைகளுக்கான உரிமைகளும், சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும், அதன் அவசியத்தை அவசரத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன், பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளானது கடைபிடிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அவையில் 2011 ஆம் ஆண்டு இந்நாளைச் சிறப்பிக்க வேண்டும் என்று கனடா நாடு தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானம் தொடக்கத்தில் சில நாடுகளால் முன்மொழியப்பட்டு அதன்பின் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் அவை 2011 ஆம் ஆண்டில், அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளாக (International Day of the Girl Child) அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் நாளில், பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகமெங்கும், பாலினச் சமத்துவம், அனைத்துத் துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளைக் களைதல் போன்றவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகின்றது. பெண் குழந்தைகள் நினைத்ததைச் சாதிக்க உறுதுணையாக நின்று, அவர்கள் பின்னாளில் சாதனைப் பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவு கூரும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும், சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும், இந்நாளில் பல நடவடிக்கைகளைத் தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் நல அரசுகள் வழியாக உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவதற்கு முன்பாகவே, இந்தியாவில் 2009-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொஓர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் நாளில் இந்தியாவில், தேசியப் பெண் குழந்தை நாளானது (National Girl Child Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்நாளைக் கொண்டாடுவதன் வழியாக, பாலினச் சமத்துவம், சம வேலைக்கு சம ஊதியம், பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மேலும், பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல்கள் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.
சமூக வலைதளங்கள் வழியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று மெட்டா புள்ளி விபரம் தெரிவிக்கின்றது என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் செல்வ கோமதி தெரிவித்துள்ளார். பன்னாட்டு பெண் குழந்தைகள் தினம் டிசம்பர் 19, 2011 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11, 2012 அன்று அனுசரிக்கப்பட்டது.
நான் ஒரு பெண், மாற்றத்தை நாம் வழிநடத்துகின்றேன்
பெண் நல அமைப்புகள், ஐ.நா. கூட்டாளிகள் மற்றும் மிக முக்கியமாக, பெண்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட 2025 பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளின் கருப்பொருளாக, நான் ஒரு பெண், மாற்றத்தை நாம் வழிநடத்துகின்றேன் : நெருக்கடியின் முன்னணியில் உள்ள பெண்கள்' என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், பெண்கள் இன்றைய மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் சமூகங்களில் காலநிலை நீதிக்காகப் போராடுகிறார்கள், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோருகிறார்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்கிறார்கள். பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்காக மட்டுமல்லாமல், அவர்கள் யார், அவர்கள் கொண்டு வரும் தீர்வுகளுக்காகவும் தங்களைக் யார் என்று அடையாளம் காணக் கேட்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலும், அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதில்லை, அவர்களின் செயல்கள் புறக்கணிக்கப்படுகின்றன, அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகள் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன.
பாலின சமத்துவத்திற்கான உலகின் வரைபடமான 30ஆவது ஆண்டு பெய்ஜிங் பிரகடனத்திலிருந்து, பெண்கள் உண்மையில் யார் என்பதைக் காணவும், அவர்களின் குரல்களைக் கேட்கவும், அவர்களின் வரம்பற்ற திறனை அங்கீகரிக்கவும் பன்னாட்டுப் பெண்குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. பெண்கள் ஒரு சிறந்த உலகத்திற்காக காத்திருக்கவில்லை, அவர்கள் அதை உருவாக்குகிறார்கள். உலகளவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாணவிகளுக்கு விழிப்புணர்வு: இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களும் பெண் குழந்தைகளுக்கு எதிராக உள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று மெட்டா புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
பெண்குழந்தைகள் பாதுகாப்பு
தனி மனிதப் பாதுகாப்பு என்பது கேள்விக்கு உள்ளாகும் இச்சமயங்களில், பெண்குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு அவசியமாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சைபர் கிரைம் காவல்துறையை வலுப்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
ஆண் குழந்தைகளுக்கு Don't Touch:
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் (good Touch), கெட்ட தொடுதல் (bad Touch) கற்பிப்பதை போன்று, ஆண் குழந்தைகளுக்கு Don't Touch என்று கற்பித்தல் வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் 'டோன்ட் டச்' குறித்து கற்பிப்பது அவசியம்.
பாலின சமத்துவம்:
பாலின சமத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டும். இவை சக மனிதர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்ற புரிதலை இன்றைய இளம் தலைமுறைக்கு உருவாக்கும். அதேபோன்று, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், இலவசக் கல்வி பெறுவதற்கான வயது வரம்பை 14லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும். இதன் வழியாக அனைத்துக் குழந்தைகளும் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் பயன் பெறுவர்"
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் தினம் குறித்து, குழந்தைகள் நலக் குழு மற்றும் சிறார் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் பாலசுந்தரி அவர்கள் கூறுகையில், "தொழில் நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ள 21 ஆம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைப் பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் சூழலில் நாம் இல்லை. அக்குழந்தைகள் குறித்த பழமைக் கருத்துக்கள் இன்னும் நம் சமூகத்தில் வேரூன்றியுள்ளன. குழந்தைகள் பிறப்பு விகிதம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 2001ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் என்ற முறையில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 2021-ல் கணக்கெடுப்பு மேற்கொள்ளாததால் புதிய விகிதம் குறித்து தெரியவில்லை. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கவலையளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை நாம் இன்னும் உருவாக்கிக் கொடுக்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் துரிதமாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை கண்காணிக்கக்கூடிய அமைப்புகளும், நீதிமன்றங்களும் சரியாக செயல்படுகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தேவையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் வேகம் தேவைப்படுகிறது".
"குழந்தைகள் மீதான வன்முறை அதிகமாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண் குழந்தைகள். தற்போது, கல்லூரி பயிலும் முதலாம் ஆண்டு மாணவியருடன் கலந்துரையாடல் செய்கையில், தங்களது சிறுவயதில் பாலியல் நீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளேன் என்று அவர்கள் கூறுவதாக எடுத்துரைத்துள்ளார், சோகோ அறக்கட்டளையின் இணை இயக்குநரும், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளருமான வழக்கறிஞர் செல்வ கோமதி.
சட்ட நுணுக்கங்கள் தெரியாத காரணத்தினால், பாதிப்பு குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் பகிர முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களுக்கான கவுன்சிலிங் (Counselling) தேவையாக உள்ளது. 500 மாணவிகளில் 30 மாணவிகள் இதுபோன்ற பாதிப்பை எதிர்கொண்டவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசியப் பெண் குழந்தை நாள் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டில், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றிமைக்கும் சிறந்த திட்டமாகும். பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் வழியாக பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் வழியாக பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
இத்திட்டத்தின் வழியாக, பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தொடர் கல்வியி கற்க வைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்த பட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்தல், பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவித்தல், இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல், பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல் போன்றவை நோக்கமாகக் கொள்ளப்பட்டது.
பிறக்கும் போதே பொன் குழந்தையாகிறார்கள், பெண் குழந்தைகள். பிறந்த நாடும் பெண்பாலே, இனிதாய் நாம் பேசும் மொழியும் பெண்பாலே! தாங்கும் பூமியும் பெண்பாலே, அழகு ஓங்கும் இயற்கையதும் பெண்பாலே, பெண் குழந்தையே பூமியின் வரம், அவளின்றியும் உண்டோ இப்பூமியில் தரம்? மழலையாய் பெண் பிறந்தால் மகிழ்வோம்! மானுடம் அவளால் செழிக்குமென நெகிழ்வோம்! கள்ளிப்பாலுக்கு தீவைப்போம் ! அவளுக்கு கரும்பலகையில் கல்வி போதிப்போம்!!. மொட்டுக்களை கசக்கும் பாலியல் மோசங்களை ஒழிப்போம்! பெண்தேவதைகளுக்கும் சமஉரிமை சமுதாயத்தில்அளிப்போம் !!... அனைவருக்கும் இனிய பன்னாட்டு பெண்குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்