தேடுதல்

இந்தியாவில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் இந்தியாவில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்   (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – அறிவியல் மற்றும் குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் குழந்தைகள் மீது பச்சாதாபம் மற்றும் இரக்கக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. நமது நாட்டின் எதிர்காலம் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்கும் வளர்ப்பு மற்றும் ஆதரவைப் பொறுத்தது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவில் பல முக்கியமான நாட்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள் இலட்சக் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியக் குழந்தைகளின் அப்பாவித்தனம், ஆற்றல் மற்றும் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க இது ஒரு சிறந்த நாளாகும். lநவம்பர் 14 இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், இந்த நாள் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும் அரசியல்வாதியுமான நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார், மேலும் அவர் 'நேரு மாமா' என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இன்றும் அந்தப் பெயரால் நினைவுகூரப்படுகிறார், மேலும் குழந்தைகள் மீதான அவரது அன்பை கௌரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உண்மையான குழந்தைகள் தினம் தொடக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப்பட்டது. இருப்பினும், 1964-இல் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் அவரது பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியை குழந்தைகள் தினமாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாள் அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை தினம் அல்ல, ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று இந்த நாளின் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவின் கல்வி அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியதற்கும், தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்ததற்கும் ஜவஹர்லால் நேரு இன்றும் நினைவுகூரப்படுகிறார். குழந்தைகளின் ஆற்றலில் அவர் மிகவும் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கு ஒரு சிறந்த கருவியாக இருக்கும் கல்விக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் போன்ற பல கல்வி நிறுவனங்களை அவர் உருவாக்கினார். இவை இந்தியாவின் கல்வி அமைப்பின் முதுகெலும்பாக உள்ளன. இந்த மாபெரும் தலைவரை நினைவு கூர்வதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு குழந்தையும், சாதி, மதம், நிதி அல்லது அரசியல் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், கல்வி, வளர்ப்பு, நல்வாழ்வு மற்றும் உடல்நலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறத் தகுதியானவர்கள் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.

குழந்தைகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் குழந்தைகள் தினத்தின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகும். இதில் கல்வி, நலவாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பான சூழலுக்கான உரிமை ஆகியவை அடங்கும்.

குழந்தைகள் தினம் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைக் கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை அரவணைக்க ஊக்குவிக்கிறது, அவர்கள் வாழ்வில் விளையாட்டு, படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு நினைவூட்டுகிறது.

கல்வி என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கான அடிப்படையாகும். குழந்தைகள் தினம், அவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பொருட்படுத்தாமல், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது.

குழந்தைத் தொழிலாளர், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் குற்றச்செயல்கள் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய நாளாக குழந்தைகள் தினம் செயல்படுகிறது. சமூகம் அதன் மிகவும் முக்கியமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க நினைவூட்டும் நாளாக இது உள்ளது. (நன்றி : Bold Sky)

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 1 இலட்சத்து பத்தாயிரம் (1,01,10,000) ஆகும். 2021-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 3 கோடியே 30 இலட்சம் குழந்தைகள் தொழிலாளர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 80 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். 2021-22-ம்ஆண்டில் தமிழகத்தில் 2,586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தைகள் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்கிளின் கல்வியைத் தொடர முடியாத ஏற்பட்டது.

குறிப்பாக, சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொருளாதாராத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது.

ஆகவே, குழந்தைகள் தினம் குழந்தைகள் மீது பச்சாதாபம் மற்றும் இரக்கக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதையும், நமது நாட்டின் எதிர்காலம் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்கும் வளர்ப்பு மற்றும் ஆதரவைப் பொறுத்தது என்பதையும் உணர்ந்துகொண்டு செயல்படுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 நவம்பர் 2025, 15:14