தென் சூடானில் மோதலால் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தென் சூடான் அதிகமான உணவு மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும், 2026-ஆம் ஆண்டில் 75,60,000 மக்கள் (மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்) நெருக்கடியை அல்லது மோசமான அளவிலான பசியை அனுபவிப்பார்கள் என்றும் கணித்துள்ளது யுனிசெப் நிறுவனம்.
நவம்பர் 5, புதனன்று வெளியிட்டுள்ள அதன் அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அந்நிறுவனம், அங்கு நிகழ்ந்து வரும் தொடர்ச்சியான மோதல்களால் 20, இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
லுவாக்பினி / நாசிர் மற்றும் ஃபங்காக் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்றும், அங்கு 28,000 பேர் பேரழிவு தரும் பசியை எதிர்கொள்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ள அந்நிறுவனம், அங்கு மோதல்கள் மற்றும் அணுகல் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் இடப்பெயர்ச்சி, பாதுகாப்பின்மை, வெள்ளம் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு காரணமாக மனிதாபிமான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டது என்றும், பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றங்கள் விவசாயத்தையும் சந்தைகளையும் சீர்குலைக்கின்றன என்றும் கூறியுள்ளது அந்நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்