தேடுதல்

சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி  

வாரம் ஓர் அலசல் - நவம்பர் 5, உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் சுனாமி தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 2015 இல், ஐநா பொதுச் சபை நவம்பர் 5 ஐ உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக (World Tsunami Awareness Day) அறிவித்தது. உலக சுனாமி விழிப்புணர்வு தினம் ஜப்பானின் சிந்தனையில் உருவானது. ஆழிப்பேரலை அல்லது சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். 'சு' என்றால் துறைமுகம் என்றும், 'னாமி' என்றால் அலை என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே, சுனாமி என்ற சொல்லுக்கு 'துறைமுக அலை' என்று பொருள்.

கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின் மீது தான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப நூற்றாண்டுகளைக் கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755 ஆம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது. 1883 ஆம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாகத் திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது.

இயற்கைக்கு இணையாக செயற்கை ஈடுகட்டி நிற்கிறது என்றாலும், சில நேரங்களில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாததை நாம் காண நேரிடுகிறது. அதுபோல்தான் ஆழிப்பேரலை என்று அழைக்கப்படும் சுனாமியும்.

நாம் வாழுகின்ற பூமியில் 70 விழுக்காடு நிலப்பரப்பு கடலுக்கு அடியில் உள்ளது. பூமி முழுவதையும் நிலம் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள 12 பாறைத் தட்டுகள் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளன. இந்தத் தட்டுகள் ஒன்றையொன்று மோதிக் கொண்டாலோ அல்லது இருக்கின்ற இடத்திலிருந்து நகர்ந்தாலோ பூகம்பங்கள் உருவாகின்றன. தட்டுகள் நேருக்கு நேர் ஒன்றையோன்று மோதிக்கொள்ளும் பொழுது ஒன்று கீழேயும் மற்றொன்று மேலேயுமாக தள்ளப்படுகிறது. இரண்டுமே மோதிக்கொள்ளும் வேகத்தைப் பொறுத்து ஏற்படும் இடைவெளியில் இருந்து கிளம்பும் அழுத்தமும், வெப்பமும் மேல் நோக்கி ஆவேசமாக வெளி வருகிறது. இதன் வேகத்தின் அளவைப் பொறுத்தே கடல் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றில் நடுக்கம் ஏற்படுகிறது. கடலுக்கு அடியில் ஏற்படும் இந்த பூகம்பம் கடலின் மேற்பரப்பிற்கு வரும் பொழுது ராட்சச அலைகளை உண்டாக்குகிறது.

நில அதிர்வுக்கு தக்கவாறு கடல் அலைகளின் வீரியம் இருக்கும். ரிக்டர் அளவுகோளில் ஐந்துக்கு குறைவாக இருந்தால் எந்த பாதிப்பும் தெரியாது. ஐந்து முதல் ஏழு வரை ஓரளவுக்கு பாதிப்புகள் இருக்கும். 7.5க்கு மேல் இருக்கும்பொழுதுதான் சுனாமி அலைகள் தோன்றும். ஆழிப்பேரலை சாதாரண நேரங்களில் எழும்பும் அலைகளைப் போல் அல்லாமல் மிக அதிக உயரமாகவும் மணிக்கு 800 முதல் 1000 கிலோ மீட்டர் வேகத்திலும் இவ்வலைகள் நிலப்பகுதிக்குள் நுழையும்பொழுது நிலநடுக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் காட்டிலும் மிக மிக அதிகமான அளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கி.மு. 326ல் சிந்து சமவெளி கட்ச் வளைக்குடா பகுதி போன்றவற்றில் சுனாமி ஏற்பட்டிருக்கிறது .1650ல் கிரேக்கத்தில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு 1775, 1883, 1893, 1896 என்று இடைவெளி குறைந்து ஏற்பட்டு இருந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் ஸ்பெயின், போர்ச்சுக்கல், வட ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, ஜாவா, ஜப்பான், போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள ஹவாய் இதில் கி.பி 1946ல் ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமிதான் பேரழிவைக் கொடுத்திருக்கிறது. ரஷ்யாவிலும் சுனாமி தாக்கியிருக்கிறது. கி.பி. 1883ல் இந்தோனேசியாவில் உருவாகி சென்னையைத் தாக்கி இருக்கிறது. 1945ல் பாகிஸ்தானின் கராச்சி பகுதிகளில் உருவாகி இந்தியாவின் கட்ச் பகுதியை தாக்கி இருக்கிறது.

அதன் பிறகு 2004 டிசம்பர் 26 அன்று உண்டான சுனாமியால் சுமத்திரா தீவு இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை, சோமாலியா, மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டன. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் டிசம்பர் 2004ல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ. தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை அளவுக்கு, தமிழகம் சந்தித்தது .

இந்தியாவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைப் பகுதிகள் முழுவதுமாகவும் ஆந்திராவின் தெற்கு பகுதியையும் கேரளா, கர்நாடகா மாநிலங்களின் சில பகுதிகளையும் சுனாமி கடுமையாகத் தாக்கியது. இதுதான் பெருமளவில் சுனாமி தாக்கத்தை ஏற்படுத்தியது. இது சமீபத்தியதாகவும் அதிக மக்களை பலி கொண்டதாகவும் இருப்பதால் எல்லோருடைய மனதிலும் பதிந்த சோக சுவடுகள் இன்றும் மறையாமலேயே இருக்கின்றன. ஆக, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்த்தால் சுனாமி என்பது பூமிக்கு புதியவை அல்ல எனத் தெரிய வருகிறது. விலங்குகள், பறவை இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் செயல்கள் வித்தியாசமாகத் தென்பட்டால் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டு... கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள்... டிசம்பர் 26 ஆம் தேதியை தமிழக மக்களால் அவ்வளவு எளிதாக மறக்க இயலாது. அன்று எழுந்த ஆழிப்பேரலை, பல்லாயிரக்கணக்கானோரின் உயிரையும் உடைமைகளையும் ஈவு இரக்கமின்றி தனக்குள் வாரி சுருட்டிக்கொண்டது. உற்றார் உறவினர்களை இழந்த குடும்பங்கள், இப்போதுவரை அந்த பாதிப்பில் இருந்து மீளமுடியாத பெரும் துயரத்தை 20 ஆண்டுகளாக சுமந்து வருகின்றன. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 100 அடி உயரம் வரை எழுந்த சுனாமி பேரலைகள், நாடு நகரங்கள் என எந்த வித்தியாசமின்றி சூறையாடின. இந்தியா, தாய்லாந்து, இலங்கை உள்பட 14 நாடுகளில் சுமார் இரண்டரை லட்சம் பேரின் உயிர்கள், கடலுக்கு இறையாகின.

சுனாமி இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. (நன்றி : இணையதள கட்டுரைகள்)

இந்தச் சுனாமி என்பது ஓர் இயற்கைப் பேரிடர் என்பதால் அதனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் வலிமையும் மனிதரின் கரங்களில் இல்லை. ஆனாலும் இப்புவியைப் பாதுகாக்கவும் அதனைப் பராமரிக்கவும் வேண்டிய பொறுப்பு மனித இனத்தின் மிகப்பெரும் கடமையாக அமைகிறது. அவ்வாறு கொள்ளும்போது சுனாமி என்னும் இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மனித இனம் தன்னை ஓரளவாவது காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பது திண்ணம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 நவம்பர் 2025, 15:56