தேடுதல்

மாணவர்கள் மாணவர்கள் 

வாரம் ஓர் அலசல் : நவம்பர் 17, அனைத்துலக மாணவர் தினம்

இன்றைய மாணவர்கள் நாளைய குடிமகன்கள், இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள், இன்றைய மாணவர்களே எதிர்கால இந்தியா எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நவம்பர் மாதத்தில் முக்கியதினம் என்றால் நவம்பர் 14 குழந்தைகள் தினம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அது மட்டும் இல்லாமல் முக்கிய தினம் ஒன்றும் உள்ளது. அது தான் அனைத்துலக மாணவர்கள் தினம். மாணவர்கள் தினம் செப்டம்பர் மாதம் தானே என்று யோசிக்கலாம். அது தேசிய மாணவர் தினம். இன்று நவம்பர் 17 அனைத்துலக மாணவர்கள் தினம்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டில் உள்ள மன்னர் எவ்வளவு முக்கியமோ அதே போன்று மாணவர்கள் மிகவும் முக்கியம். நம் நாடு அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, காவல் துறை, கணினி துறை என அனைத்து துறையிலும் சாதனை படைத்து பொருளாதார வளர்ச்சியில் கொடிகட்டி பறப்பதற்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் மாணவர்களின் எழுச்சியை போற்றும் விதமாக அனைத்துலக மாணவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது

உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கவுரவிக்க ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மாணவர்களின் தடைகளை நீக்கி கலாச்சாரப் பிளவுகளுக்கு இடையே பிணைப்புகளை உருவாக்குவதற்கான திறனைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுதான் அனைத்துலக மாணவர் தினமான நவம்பர் 17. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று, அனைத்து மாணவர்களுக்கும் கல்வியின் மதிப்பை வலியுறுத்தும் வகையில் அனைத்துலக மாணவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1933-ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது, ​​ஜெர்மனியின் எல்லைகளுக்கு வெளியே உள்ள நாடுகள் மீது மூன்றாம் ரைச் ஆக்கிரமிப்பு உரிமைகோரலைத் தொடங்கியது. ஹிட்லரின் சொந்த நாடான ஆஸ்திரியாவை 1938-ஆம் ஆண்டில் நாஜிக்கள் முதன்முதலில் கைப்பற்றினர். அடுத்து, செக்கோஸ்லோவாக்கியாவை அதன் பாதிப் பகுதிகளை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தினர். ஜெர்மனி செக் பகுதிகளை ஆக்கிரமித்தது, ஸ்லோவாக்கியாவை ஒரு தனி நாடாகப் பிரிக்க கட்டாயப்படுத்தியது.

1939-ஆம் ஆண்டு செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களின் போராட்டம் நாஜிப் படைகளினால் நசுக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். பல்கலைக்கழகத்தில் நாஜிக்கள் நடத்திய தாக்குதலின் ஆண்டு நிறைவையொட்டி, நவம்பர் 17-ஆம் தேதி அனைத்துலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்துலக மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதும் இந்த நாளின் நோக்கமாகும். இந்நாள் முதன் முதலில் 1941-ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. மாணவர்களிடையே பன்முகக் கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் குழுப்பணி ஆகியவற்றின் கொண்டாட்டம் அனைத்துலக மாணவர் தினம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்புகொள்ளும் சூழல்களில், ஒருவரிடமிருந்து ஒருவர் பல விடயங்களைக் கற்றுக்கொண்டு, கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதால் புதுமை மற்றும் படைப்பாற்றல் செழித்து வளரும். கூடுதலாக, குழந்தைகள் வெற்றிகரமான பெரியவர்களாக வளர, சிக்கல்களைச் சமாளிக்கவும் புதிய தீர்வுகளைக் கொண்டுவரவும், அவர்கள் மக்களின் பன்முகத்தன்மையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் வேறுபாடுகளை ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதப்படுகிறது. எனவே, அனைத்துலக  மாணவர் தினத்தை அனுசரிப்பதன் வழியாக, பன்முகத்தன்மையே நம்மை மனிதர்களாக வரையறுக்கிறது என்பதை அனைவருக்கும் நினைவூட்டலாம். நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம். இந்தத் தொடர்புகள் மற்றவர்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கான இரக்க சுபாவத்தை வளர்ப்பதற்கும் நமக்கு உதவுகின்றன.

இதன் அடிப்படையிலேயே சர்வதேச மாணவர் தினத்தைக் கொண்டாட பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் இந்த நாளில் கல்விப் பட்டறைகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துகின்றன. கூடுதலாக, மாணவர்கள் கட்டுரை எழுதும் போட்டிகள், சோதனைகள், விவாதங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.

மாணவர் சமுதாயத்திற்கான பிரச்சனைகளை ஆய்வு செய்தல் மற்றும் தீர்வுகளைக் கொண்டு வருவது குறித்து உயரதிகாரிகளின் அதிகாரபூர்வமான விரிவுரைகளுடன் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. அனைத்துலக மாணவர் தினத்தன்று, உலகம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. கல்விக்கான உரிமைக்காகப் போராடிய மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அனைவருக்கும் உயர்தரக் கல்வி கிடைக்கக்கூடிய எதிர்காலத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். எனவே அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி அனைத்துலக மாணவர் தினத்தை நினைவு கூர்வோம்! (நன்றி : தினகரன்)

இன்றைய மாணவர்

இன்றைய யுகம் நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பில் இருக்கின்றோம். ஆனால் ஒழுக்கம் பண்பாடு கலாச்சார விஷயத்தில் மிக மிக பின் தங்கியவர்களாக இருக்கிறோம். நமது தொழில் நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது விளைவு? இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் துவங்கி விட்டது மனித சமூகம்.

வேர்களை வெறுக்கும் விழுதுகளாய்! பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவர்கள் பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை வழங்குவதை வெறுக்கிறார்கள். குறிப்பாக, மாணவர் சமுதாயம் தான் செய்த தவறுகளுக்காகக் கூட ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. கண்டிக்கும் ஆசிரியர்களைத் துன்புறுத்தவும், சில நேரங்களில் கொலை செய்யவும் கூட துணிந்திருக்கிறார்கள் மாணவர்கள். தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் தோழமை பாராட்டுவது நட்புடன் நடந்து கொள்வது போன்ற அறமான விடயங்கள் அழிந்து போய் அற்பமான காரணங்களுக்காக குரோதம் வளர்த்து அறுவா தூக்கி சண்டையிடும் வில்லன்களாக இன்றைய மாணவர் சமூகம் மாறி இருக்கிறது. தன்னை கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

விதவிதமான போதைப் பொருட்களுக்கு தங்களை அடிமையாக்கி இருக்கிறார்கள். இதனால் ஏற்படும் உடல் நலக் கேடு ஒரு புறம். மறுபுறம் அதை விடக் கொடூரமாக போதை ஏற்படுத்தும் மனநலக் கோளாறுகளால் பெண்களை சில்மிஷம் செய்யும், சீரழிக்கும் சமுதாயமாக இளைஞர் சமுதாயம் குறிப்பாக மாணவர்களும் மாறி வருகிறார்கள் என்பது வேதனை.

‘இன்றைய மாணவர்களே நாளைய குடிமகன்கள், இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள், இன்றைய மாணவர்களே எதிர்கால இந்தியா, இளைஞர்கள் கையில் எதிர்கால இந்தியா!’ என்ற கோஷங்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால செயல்பாடுகளைப் பற்றி பெருமிதத்தோடு கூறும் வார்த்தைகள் என்பதில் சந்தேகமில்லை. சுவாமி விவேகானந்தர் தொட்டு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வரை அனைவரது நம்பிக்கையும் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் மட்டுமே. ஆகவே இதனை உணர்ந்து மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். (நன்றி : தி இந்து தமிழ்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 நவம்பர் 2025, 12:02