தேடுதல்

வன்முறைக்கு ஆளாகும் பத்திரிகையாளர்கள் வன்முறைக்கு ஆளாகும் பத்திரிகையாளர்கள்   (AFP or licensors)

இந்த ஆண்டு செய்தியாளர்களுக்கு ஒரு கொடிய ஆண்டு!

எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் அமைப்பின் (RSF) 2025-ஆம் ஆண்டு அறிக்கை பத்திரிகையாளர்களுக்கு இந்த 2025-ஆம் ஆண்டு, ஒரு கொடிய ஆண்டு என்றும் அவர்களின் உயிரிழப்புகளைப் பற்றிய தரவுகளையும் முதன்மைப்படுத்தியுள்ளது.

செபஸ்தியான் வனத்தையன்

எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் என்ற அமைப்பு இந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட  பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 09, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த 2025-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களுக்கு ஒரு கொடிய ஆண்டு என்றும், வெறுப்பிற்கும் தண்டனைக்கும் வழிவகுக்கும் ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு மிகவும் ஆபத்தான ஆண்டுகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ள இவ்வறிக்கை, முக்கிய புள்ளிவிவரங்களின்படி ஏறத்தாழ 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 503 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 135 பேர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 20 பேர் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

குறிப்பாக, பத்திரிகையாளர்கள் வெறும் மோதல்களினால் மட்டும் பாதிக்கப்படுவதில்லை மாறாக, வேண்டுமென்றே அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் ஏறத்தாழ 43 விழுக்காட்டினர் காசா பகுதில் இருந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, அங்கு இஸ்ரேலியப் படைகள் ஊடகப் பணியாளர்களைத் திரும்பத் திரும்பக் குறிவைத்து தாக்கியது என்றும் எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

இருப்பினும், உக்ரைன், சூடான், ஏமன் மற்றும் சிரியா போன்ற பகுதிகளிலும் பத்திரிகைகளுக்கு எதிரான வன்முறை பரவலாக உள்ளது என்றும், அங்கு இராணுவ மற்றும் துணை இராணுவக் குழுக்களால் பத்திரிகையாளர்கள் இத்தகைய வன்முறைக்கு எதிராக அமைதிகாக்க (குரல்கொடுக்காதிருக்க) நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில், குறிப்பாக மெக்சிகோவில், பத்திரிகையாளர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், ஊழல் அதிகாரிகள் மற்றும் குற்றவியல் கூட்டமைப்புகளால்  கடுமையான வன்முறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறுகிறது அவ்வமைப்பு.

மேலும் வன்முறையின் "மெக்சிகன்மயமாக்கல்" என்று இதனைக் குறிப்பிடும் இவ்வமைப்பு, இங்கு மிரட்டல், காணாமல் போதல் மற்றும் கொலைகள் பொதுவானவை என்றும், மேலும் குற்றவாளிகள் பெரும்பாலும் எந்த தண்டனையையும் சந்திப்பதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட வன்முறைகள்,  உண்மையை சீர்குலைத்து,  தவறான தகவல் பரவுதலை அதிகரிக்க செய்து சமூகங்களைத் பலவீனபடுத்தி திரிபுபடுத்தலுக்கும் அச்சத்திற்கும் உட்படுதுவதன் வழியாக, தகவல் பெறும் உரிமையின் சிதைவை உருவாக்கியிருப்பதை இந்த அறிக்கை ஒரு கொடிய சித்தரிப்பாக காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 டிசம்பர் 2025, 15:47